Rain Alert: ‘புயல் வரும்! மழை வெளுக்கும்! அடுத்த 4 நாளுக்கு ரெடியாடுங்க மக்களே!’
”Rain Alert:அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 26 செ.மீ மழை பதிவாகி உள்ளது. ஆவடியில் 19 செ.மீ, கொளத்தூரில் 15 செ.மீ, திருவிக நகரில் 15.4 செ.மீ., அம்பத்தூரில் 14 செ.மீ., மலர் காலனியில் 13 செ.மீ மழை பதிவாகி உள்ளது”
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் மாதம் 2ஆம் தேதி தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடலில் புயலாக வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் கடலோரத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு சில இடங்களில் கனமழையும், பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது. அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 26 செ.மீ மழை பதிவாகி உள்ளது. ஆவடியில் 19 செ.மீ, கொளத்தூரில் 15 செ.மீ, திருவிக நகரில் 15.4 செ.மீ., அம்பத்தூரில் 14 செ.மீ., மலர் காலனியில் 13 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று காலை 8 மணி முதல் திறக்கப்படும் நீரின் அளவு 6ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியில் திறக்கப்படும் நீரின் அளவு ஆயிரம் கன அடியில் இருந்து இரண்டாயிரம் கன அடியாக திறக்கப்பட்டுள்ளது.