62 வருஷ வாழ்வில் இப்படி பார்த்ததே இல்ல.. நேர்த்திக்கடன் செய்யும் அண்ணாமலை.. சாட்டை போராட்டத்தை விமர்சித்த ஆர்.எஸ். பாரதி
62 வருஷ வாழ்வில் இப்படி பார்த்ததே இல்ல.. நேர்த்திக்கடன் செய்யும் அண்ணாமலை.. சாட்டை போராட்டத்தை விமர்சித்த ஆர்.எஸ். பாரதி
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கோவையில் இருக்கும் தனது இல்லத்தின்முன் சாட்டையால் அடித்துக்கொண்டார். சுமார் 6 முறை அடித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியதாவது, ‘’ அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொண்டதுபோல் தெரியவில்லை. அண்ணாமலை பதவி இல்லாமல் இருக்கிறார்.மத்திய பாஜகவில் பதவி பெறவேண்டும் ஆனால், இப்படி ஒரு நேர்த்திக்கடனை செய்யவேண்டும் என யாரோ ஒரு சாமியார் சொல்லியிருக்கிறார்.
அதனை கேட்டுக்கொண்டு, இந்த சூழலைப் பயன்படுத்திக்கொண்டு அதனை நிறைவேற்ற இவ்வாறு அண்ணாமலை செய்திருக்கிறார். நானும் 62 வருடமாக அரசியலில் இருக்கிறேன். எந்த அரசியல் தலைவரும் எந்த அரசியல்வாதியும் இப்படிப்பட்ட நிகழ்ச்சியை செய்தது கிடையாது. நேர்த்திக்கடனை நிறைவேற்றவே அண்ணாமலை இப்படி செய்திருக்கிறார். அதுமட்டுமல்ல, அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் யார் கையில் இருக்கிறது. அதில் நியமிக்கப்படும் துணைவேந்தரை யார் நியமிப்பது என்பதைத் தெரிந்துகொண்டு பதில் சொல்லவேண்டும்.
பெண்கள் மீது அக்கறையான அரசு திமுக: ஆர்.எஸ். பாரதி!
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவத்தைப் போல் நடக்கவில்லை. சென்னை மாநகர கமிஷனராக அருண் ஐ.பி.எஸ் பொறுப்பு ஏற்றுக்கொண்டபின், சிறப்பாக சட்டம் ஒழுங்கு இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். இந்தச் சம்பவம் கூட துரதிர்ஷ்டவசமானது. உடனடியாக யாரும் கோரிக்கை வைப்பதற்கு முன்பே காவல் துறை கைது செய்திருக்கிறது. ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் விசாரணைக்குப் பின் நடந்தது என்ன ஆச்சு. எனவே, இதுபற்றி யாரும் பேசி விமர்சிப்பது சரியல்ல. இந்த அரசு பெண்களுக்காக பல திட்டங்களை செய்யும் அரசு. பெண்கள் மீது அக்கறையான அரசு. அதனை யாரும் மறுக்கமுடியாது. கரும்புள்ளி ஏற்படுத்துவதுபோல சில நயவஞ்சகர்கள் செய்கிறார்கள். இதை முறியடித்துக்காட்டும் சக்தி எங்களுக்கு இருக்கிறது’’என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியிருக்கிறார்.
அண்ணாமலை செய்தது என்ன?
நேற்று அறிவித்தபடி, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், நியாயம் கேட்டு தன்னைத் தானே சாட்டையால் அடித்துக்கொண்டார் பாஜக மாநிலத் தலைவர், அண்ணாமலை. கோவையில் உள்ள தன்னுடைய வீட்டின் வெளியே, பச்சை நிற வேட்டி அணிந்து, சட்டை அணியாத உடலுடன் தோன்றிய அண்ணாமலை, சில தொண்டர்கள் பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்க, சாட்டையால் தன்னைத் தானே 6 முறை அடித்துக் கொண்டார்.
அண்ணாமலை பேசியது:
அதனைத்தொடர்ந்து பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘’ எல்லா பதவியும் வெங்காய பதவிதான் அண்ணா. என்ன காரணம் என்றால், வெங்காயத்தை உரிக்க உரிக்க ஒன்றுமே இருக்காது. எல்லோருமே தொண்டர்கள் தான். அந்தப் பதவிக்கு ஒரு சேர் போட்டு, அலங்காரம் செய்வது எல்லாம் தேவையில்லை என்று எப்போதும் நான் சொல்வேன். வெங்காயப் பதவி என்பதை நான் எப்போதும் சொல்வேன். அமைச்சர் பதவியும் வெங்காயப் பதவி தான். எத்தனை நாட்களுக்கு அது இருக்கப்போகிறது.
வெங்காயத்தை உரிப்பதுபோல் ஒன்றுமில்லாமல் போகும். அடிப்படையில் எல்லோரும் தனி மனிதர்கள் தான். பொறுப்பு வரும். பொறுப்பு போகும். பதவியிலிருப்பதால் இப்படி நடந்துக்குங்கன்னு சொல்றது எனக்கு ஏற்புடையது இல்லை. இந்தப்போராட்டம் பற்றி நகைச்சுவையாக இருப்பவர்களுக்கு நகைச்சுவையாக இருக்கட்டும். சீரியசாக இருப்பவர்களுக்கு சீரியசாக இருக்கட்டும். எங்கள் பாதைக்கு யாரையும் வாங்க என்று சொல்லவில்லை’’ என்று தெரிவித்தார்.
டாபிக்ஸ்