Puducherry: ’நான் கோப்பில் கையெழுத்திடாலும் வேலை நடப்பது இல்லை! கேள்வி வருகிறது’ ஆளுநர் முன் புதுச்சேரி முதல்வர் வேதனை!
செவிலியர்கள் அழுகிறார்கள். இது தொடர்பாக கோப்புக்கு தேவையில்லாமல் கேள்வி. இதை துறை அமைச்சராக இருந்து சொல்கிறேன் என்றால் எனக்கு எவ்வளவு சங்கடம் இருக்கும். சிலவற்றை கண்டிப்பாக செய்ய வேண்டும். முதல்வராக இருக்கும் நானே அனுமதி கொடுக்கும்போது, நிர்வாகத்தில் ஏன் இது பெரிய குறையாக உள்ளது என்று தெரியவில்லை.

'பணியிடங்களை நிரப்ப முதலமைச்சராக இருந்த நான் அனுமதி தந்தாலும், அதனை நிரப்ப முடியாத நிலை உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி வேதனை தெரிவித்து உள்ளார்.
'மாபெரும் சுகாதாரத் திருவிழா'
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு, சுகாதார மற்றும் குடும்ப நலவழித்துறை சார்பாக 'மாபெரும் சுகாதாரத் திருவிழா' புதுச்சேரி, கருவடிக்குப்பம், சிவாஜி சிலை அருகில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் 2 நாள் விழா தொடங்கியது. இன்று நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு மாபெரும் சுகாதாரத் திருவிழாவினைக் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து, டெங்கு காய்ச்சலை எதிர்த்துப் போராடுவதற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அதிகாரமளிக்கும் விரிவான திட்டமான “டிரீம்ஸ் 24 - பள்ளிகளில் கல்வி, விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு 2024" (Dengue Reduction by Education, Awareness & Monitoring in Schools – Dreams ’24) மூலம் டெங்குவைக் குறைக்கும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த உறுதுணையாக இருந்த அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வ தூதுவர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ மாணவியருக்கும் துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர்.
