பழவேற்காடு பறவைகள் சரணாலயம் அருகே இறால் பண்ணைகள்; சமூக செயற்பாட்டாளர்கள் வருத்தம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  பழவேற்காடு பறவைகள் சரணாலயம் அருகே இறால் பண்ணைகள்; சமூக செயற்பாட்டாளர்கள் வருத்தம்!

பழவேற்காடு பறவைகள் சரணாலயம் அருகே இறால் பண்ணைகள்; சமூக செயற்பாட்டாளர்கள் வருத்தம்!

Priyadarshini R HT Tamil
Updated Jun 14, 2025 02:28 PM IST

தங்கல் பெரும்புலத்தில் 700 கால்நடைகளை மேய்க்கும் பெண்கள் பொதுப்பாதைகளில் இறால் பண்ணைகள் சட்ட விரோதமாக இருப்பது தங்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

பழவேற்காடு பறவைகள் சரணாலயம் அருகே இறால் பண்ணைகள்; சமூக செயற்பாட்டாளர்கள் வருத்தம்!
பழவேற்காடு பறவைகள் சரணாலயம் அருகே இறால் பண்ணைகள்; சமூக செயற்பாட்டாளர்கள் வருத்தம்!

எண்ணூரைப் பாதுகாப்போம் அமைப்பினர், "Aquaculture land grab - இறால் பண்ணைகளின் சட்ட விரோத ஆக்கிரமிப்புகள்" என்ற தலைப்பில் செய்த ஆய்வில் 309 ஏக்கரில் இறால் பண்ணைகளை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து இருப்பதும், அதில் 62 ஏக்கரில் மேய்க்கால் மற்றும் கழுவேலி புறம்போக்கு பகுதியில் சட்ட விரோதமாக இயங்குவதாகவும் ஆதாரங்கள், புகைப்படங்களுடன் அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னேரி தாலுகாவில் உள்ள தங்கல் பெரும்புலம் பகுதியில் அதிகளவில் தாழ்த்தப்பட்ட இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களின் வாழ்க்கை கால்நடை மேய்ப்பிலும், விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில்களை நம்பியுள்ளது. அதற்கு கொதஸ்தலையார் - பழவேற்காடு ஈர நிலங்களின் பொதுப்பாதைகள் தேவை. 2023ல் திருத்தி அமைக்கப்பட்ட இறால் பண்ணைகள் சட்டவிதிகளின்படி, CAA Act 2005, படி இறால் பண்ணைகள் ஆறுகள், காயல்கள், விவசாய நிலங்கள், பிற முக்கிய பகுதிகள் (Creek) இவற்றிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் அமைக்க முடியாது. பிரிவு 13 (8) (b)ன்படி நீர்நிலைகளின் பாதுகாப்பு பகுதியிலும் (Buffer Zones) அமைக்க முடியாது. பிரிவு 3ன்படி, பொதுப் பாதைகளை ஆக்கிரமித்து எதையும் கட்டக்கூடாது என இருந்தும், 173 ஏக்கரில் விதிமுறைகளை மீறி இறால் பண்ணைகள் செயல்பட்டு வருகிறது.

விவசாயப் பரப்பில் 50 ஏக்கர் பரப்பும், கொதஸ்தலையார் ஆற்றுப்பரப்பில் 110 ஏக்கர் பரப்பும், இரண்டும் இணைந்த பரப்பில் 13 ஏக்கரில் இறால் பண்ணைகள் சட்ட விரோதமாக செயல்பட்டு வருகின்றன. இந்த சட்ட விரோத ஆக்கிரமிப்பு குறித்து கருத்து கூற திருவள்ளூர் ஆட்சியர் முன்வரவில்லை.

Coastal Aquaculture Authority விதிகளில் பதிவுசெய்யப்பட்ட 9 நிறுவனங்களில் 8 நிறுவனங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியில் (Buffer Zones) (178 ஏக்கரில் இயங்க அனுமதி பெற்றிருந்தாலும்) அவை இருப்பது எப்படி சரியாகும்?

தங்கல் பெரும்புலத்தில் 700 கால்நடைகளை மேய்க்கும் பெண்கள் பொதுப்பாதைகளில் இறால் பண்ணைகள் சட்ட விரோதமாக இருப்பது தங்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த 4 ஆண்டுகளாக இறால் பண்ணைகளின் காரணமாக விவசாய நிலங்ள் உப்புத்தன்மை கொண்டதாக மாறி விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில்-Eco Sensitive Zones (ESZ) இறால் பண்ணைகள் இருக்கக்கூடாது எனும் விதி முற்றிலுமாக மீறப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயத்திற்கு அருகிலேயே அவை சட்ட விரோதமாக செயல்பட அனுமதித்திருப்பது யாருடைய தவறு? எனும் முக்கிய கேள்வி எழுகிறது. இவையனைத்தும் பத்திரிக்கை செய்தியாக வந்த பின் தமிழக வனத்துறை இக்குற்றச்சாட்டுகளை விசாரித்து உண்மை என ஏற்றுக்கொண்டுள்ளது.

சென்னையின் முக்கிய வனத்துறை அதிகாரி ரிட்டோ சிரியாக், தமிழக முதன்மை வனத்துறை அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் இறால் பண்ணைகள் பறவைகள் சரணாலயத்தின் 10 கி.மீ பகுதிக்கு உள்ளேயே தடைசெய்யப்பட்ட பகுதியில் இருப்பதாகவும், வட்ட அல்லது மாவட்ட அதிகாரிகளிடமிருந்து உரிய அனுமதி அல்லது ஆட்சேபணை இல்லை சான்றிதழையோ பெறவில்லை என்பதையும் எழுதியுள்ளார்.

இறால் பண்ணைகளின் சில பகுதி பட்டா நிலங்களில் இருந்தாலும் 62 ஏக்கர் பகுதி அரசு புறம்போக்கு நிலங்களிலும், நீர் வழிந்தோடும் பாதைகளில் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதனால் சட்ட நடவடிக்கை பாயலாம்.

இறால் பண்ணைகளை வசதியுள்ள செல்வந்தர்கள் மட்டுமே அமைக்க முடியும்.

அதுவரை அமைதி காத்த அரசு அதிகாரிகளை என்னவென்று சொல்வது?

சுற்றுச்சூழலை விட சட்டவிரோத இறால் பண்ணைகளுக்கே தமிழகத்தில் முன்னுரிமை கொடுக்கப்படுவது எப்படி சரியாகும்?

நன்றி – மருத்துவர். புகழேந்தி.