Palamedu Jallikattu: பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு..14 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Palamedu Jallikattu: பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு..14 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு!

Palamedu Jallikattu: பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு..14 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு!

Karthikeyan S HT Tamil
Jan 16, 2024 06:30 PM IST

Palamedu Jallikattu 2024: மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் 14 காளைகளை அடக்கிய பிரபாகரன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் கார் பரிசு வென்ற பிரபாகரன்.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் கார் பரிசு வென்ற பிரபாகரன்.

அதனைத் தொடர்ந்து உலகப்புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று (ஜன.16) காலை கோலாகலமாக தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கி ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்காக மொத்தம் 3,677 காளைகளுடன், 1,412 மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்தனர். இதில் 1,000 காளைகளுடன், 700 வீரர்களுக்கு போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

மொத்தம் 10 சுற்றுகளாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த ஜல்லிக்கட்டில் 14 காளைகளை அடக்கி மதுரை பொதும்பு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் முதலிடத்தை பிடித்துள்ளார். 2020, 2022, 2024 ஆகிய 3 வருடங்களிலும் பாலமேட்டில் முதல் பரிசை வென்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளாா் பொதும்பு பிரபாகரன்.

மேலும், சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் 11 காளைகளை அடக்கி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். கொந்தகை பகுதியைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் 8 காளைகள் பிடித்து மூன்றாம் இடம் பிடித்துள்ளார். முதலிடம் பிடித்த பிரபாகரனுக்கு தமிழக அரசு சார்பில் கார் பரிசாக வழங்கப்பட இருக்கிறது. சிறந்த காளையாக புதுக்கோட்டை ராக்கெட் சின்னகருப்பு காளை தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அந்த காளையின் உரிமையாளருக்கும் தமிழக அரசு சார்பில் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. 

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 14 மாடுபிடி வீரர்கள், 9 காளை உரிமையாளர்கள், 16 பார்வையாளர்கள், 3 காவலர்கள் உள்பட 42 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 9 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாளை உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று போட்டிகளிலும் சிறந்த காளை, சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர் சார்பில் தலா ஒரு கார் என்ற அடிப்படையில் மொத்தம் 6 கார்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.