டிரெண்டிங் ஆகும் அஜித்குமார் மரணம்.. நீதி கேட்டு எக்ஸ் தளத்தில் குவியும் பதிவுகள்!
கோயில் தற்காலிகப் பணியாளர் அஜித்குமாரை, விசாரணைக்கு அழைத்துச் சென்று, அடித்து கொன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோயிலில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வரும் அஜித்குமார் என்பவரை, கோயிலுக்கு வந்த நிக்கி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற திருப்புவன் போலீசார் அடித்துக் கொன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும் அஜித்குமார் மரணத்திற்கு நீதிகேட்டு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட சமூக அமைப்பினர், எக்ஸ் தளத்தில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 6 போலீசார், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மேல் நடவடிக்கை வேண்டும் என்றும், தொடரும் விசாரணை மரணங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அஜித்குமாரின் மரணத்திற்கு நியாயம் கேட்டு, எக்ஸ் தளத்தில் ‘ஜஸ்டிஸ் ஃபார் அஜித்குமார்’ என்கிற ஃகேஷ்டாக், ட்ரெண்டிங் ஆகி வருகிறது. ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடிக்கும் அளவிற்கு, பதிவுகள் அதிகரித்தால், இந்த விவகாரம் இன்னும் சூடுபிடித்துள்ளது. பிரதான எதிர்கட்சியான அதிமுக சார்பில், கையில் எடுக்கப்பட்ட அஜித்குமார் மரண விவகாரம், அரசியல் அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.