TR Balu About TRB Raja:’ என் மகன் அமைச்சர் ஆனதற்கு பூண்டி கலைவாணனே காரணம்’ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த டி.ஆர்.பாலு
டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளதால் சக மாவட்ட எம்.எல்.ஏக்களான பூண்டி கலைவாணன், திருவையாறு துரை சந்திரசேகர் ஆகியோர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக அறிவிக்கப்பட்ட டிஆர்பி ராஜாவுக்கு கிண்டி ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹாலில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், டிஆர்பி ராஜாவின் தந்தையும் திமுக பொருளாளருமான டிஆர்பி பாலு மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பதவியேற்பு நிகழ்ச்சிக்காக ஆளுநர் மாளிகைக்கு வந்த டிஆர்பி ராஜா “முதலமைச்சரின் சிந்தனைக்கு ஏற்ப செயல்படுவேன்” என தெரிவித்திருந்தார்.
டெல்டா சீனியர்கள் அதிருப்தி?
முன்னதாக டெல்டா மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அமைச்சர்கள் யாரும் அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை என்ற கருத்து முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதலே கூறப்பட்டு வந்தது.
டிஆர்பி ராஜா அமைச்சராக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் திருவாரூர் மாவட்ட செயலாளராகவும் எம்.எல்.ஏவாகவும் உள்ள பூண்டி கலைவாணன் மற்றும் திருவையாறு தொகுதியில் நடிகர் சிவாஜி கணேசனை தோற்கடித்து அத்தொகுதியில் அதிக முறை எம்.எல்.ஏவாக வென்ற துரை சந்திரசேகரும் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என தலைமைக்கு கோரிக்கைவிடுத்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
டி.ஆர்.பாலு பேட்டி
பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிஆர்பி ராஜாவின் தந்தையும் திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு கூறுகையில், திராவிட மாடல் ஆட்சியின் நிலைக்கலனாக திகழும் எங்கள் அன்புக்குரிய தலைவர், பாசமிகு தமிழக முதல்வரின் எண்ணங்களை எதிர்ப்பார்ப்புகளை டிஆர்பி ராஜா நிறைவேற்றி மிகச்சிறப்பான நல்ல அமைச்சர் என்ற பெயரை எடுக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள் என்றார்.
டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பதவி கொடுத்ததால் பூண்டி கலைவாணன் உள்ளிட்டோர் அதிருப்தியில் உள்ளதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, பதிலளித்த டி.ஆர்.பாலு, ”அவர் மாவட்ட செயலாளர், இவர் அமைச்சராக இருப்பதற்கு அவர்தான் முக்கிய காரணம்” என்றும் அவர் பதிலளித்தார்.
டாபிக்ஸ்