Pongal gift: ‘அரிசி ரேஷன் கார்டு வைத்திருந்தாலும் பொங்கல் பரிசு ரூ.1000 கிடைக்கல':அதிருப்தியில் மக்கள், காரணம் என்ன?
குறிப்பாக அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பரிசுத் தொகைக்கான டோக்கன் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
பொங்கல் பரிசு ரூ.1000 தங்களுக்கு கிடைக்காமல் போனது வருத்தமளிப்பதாக பொதுமக்களில் சிலர் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டுமே ரூ.1000 பரிசுத்தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 3 வகையான PHH, PHH-AAY, NPHH அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே ரூ.1000 வழங்க டோக்கன் விநியோகிக்கப்பட்டு வருகிறது. சில பகுதிகளில் வீடுதோறும் சென்று டோக்கன் வழங்கும் பணிகளும், சில பகுதிகளில் நேரடியாக ரேஷன் கடைகளிலும் வரிசையில் நிற்க வைத்து டோக்கன் வழங்கும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.
ஆனால் அதிலும் பலருக்கு குறிப்பாக அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பரிசுத் தொகைக்கான டோக்கன் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், பல இடங்களில் பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
சென்னை நங்கநல்லூரில் ரேஷன் கடை ஒன்றில் இருந்து சோகத்துடன் வெளியே வந்த சிலர் கூறுகையில், "இதுவரை எங்களுக்கு இதுபோன்று நடந்ததில்லை. பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிப்பு வந்தால், எங்களுக்கு அது இதுவரை கிடைத்தே வந்திருக்கிறது. கிடைக்காமல் போனது இதுவே முதல்முறை. பாகுபாடு இன்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொடுத்திருக்க வேண்டும். அரிசி அட்டைதானே வைத்திருக்கிறோம். என்ன காரணத்திற்காக எங்கள் பெயர் லிஸ்ட்டில் வரவில்லை என்று கேட்டால், தெரியவில்லை. உங்கள் வந்தால் டோக்கன் கொடுக்கப்போகிறோம் என்று ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்" என்று அதிருப்தியுடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் துறையின் உதவி எண் 1967-ஐ தொடர்பு கொண்டு கேட்டபோது, "மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய அட்டைதாரர்கள் அனைவருக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கப்படும். தகுதி பெறாமல் போன சிலர் இந்த வகைப்பாட்டிற்குள் வந்திருப்பார்கள். இந்த செயல்முறை ஆஃப்லைனில் மட்டுமே நடக்கிறது. மேலதிக தகவல்களுக்கு பொதுமக்கள் அந்தந்த பகுதி உணவுப் பொருள் வழங்கல் உதவி ஆணையாளர், அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்" என்று கூறினர்.
உணவு பொருள் வழங்கல் உதவி ஆணையர்களின் தொடர்பு எண்கள், மண்டலம் வாரியாக கிடைக்கிறது.
டாபிக்ஸ்