‘பொங்கல் தொகுப்பில் ரொக்கம் விடுபட மத்திய அரசு தான் காரணம்’ தங்கம் தென்னரசு விளக்கம்!
‘இது போன்ற கடினமான சூழ்நிலையில், நிதி சுமையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம். கூடுதலாக பொங்கல் தொகுப்பு வழங்க 280 கோடி ரூபாய் தேவைப்படும்’
தமிழக அரசின் பொங்கல் தொகுப்பில், ரொக்கத் தொகை விடுபட்டது ஏன் என்று, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கியுள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அது தொடர்பாக கூறியவை இதோ:
‘கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு, சிலை வெள்ளி விழா காண உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் நாளை வருகை தரஉள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைந்ததால் மூன்று நாள் நிகழ்ச்சி இரண்டு நாட்களாக குறைக்கப்பட்டு மூன்றாவது நாள் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது,’ என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள், ‘இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் ஆயிரம் ரூபாய் பரிசு ஏன் வழங்கவில்லை?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு,
கேட்டது கிடைக்கவில்லை
‘கடந்த ஆண்டு மட்டும் மிகப்பெரிய இயற்கை பேரிடரை தமிழகம் சந்தித்துள்ளது, 2028 கோடி ரூபாயை பேரிடர்களுக்காக நமது சொந்த நெதியிலிருந்து செலவு செய்துள்ளோம். மத்திய அரசிடம் பேரிடர் நிதிக்காக சுமார் 37 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு நாம் கோரிக்கை வைத்தோம். ஆனால் மத்திய அரசு கொடுத்தது 276 கோடி ரூபாய் மட்டுமே. கேட்ட தொகை மிக அதிகம், ஆனால் கிடைத்த தொகை மிக சொற்பனது.
நிதிசுமையில் தமிழ்நாடு அரசு
ஆக இது போன்ற கடினமான சூழ்நிலையில், நிதி சுமையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம். கூடுதலாக பொங்கல் தொகுப்பு வழங்க 280 கோடி ரூபாய் தேவைப்படும். வரும் காலத்தில் நல்ல சூழ்நிலை உருவாகும் என்று நம்புகிறேன். ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாய் பெற்று வரும் மகளிருக்கு, பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு முன்கூட்டியே அந்த தொகையை வழங்க தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழி என்று, பிரதமர் கூறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழ் மொழி இருந்திருக்கிறது. அதற்கான சான்றுகளும் நம்மிடம் உள்ளன,’ என்று அந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.