பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. 9 பேரும் குற்றவாளிகள் - கோவை மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
இளம் பெண் ஒருவர் அடிக்காதீங்க அண்ணா என , தன்னை வேட்டையாடிய கயவர்களிடம் கெஞ்சும் வீடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் அனலை கக்கியது. இந்த வழக்கில் 6 ஆண்டுகள் விசாரணை நிறைவடைந்த நிலையில் 9 பேரும் குற்றவாளிகள் என இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

என்னை அடிக்காதீர்கள் அண்ணா.. கதறிய பெண்ணின் குரலை தமிழகம் மறந்து விட வாய்பில்லை.. ஆம் கடந்த 2019ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் அடிக்காதீங்க அண்ணா என , தன்னை வேட்டையாடிய கயவர்களிடம் கெஞ்சும் வீடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் அனலை கக்கியது. நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியது. இந்நிலையில் 6 ஆண்டுகள் விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி பகுதியில் வசதியான குடும்பங்களை இளைஞர்கள் கும்பல் பெண்களை காதல் ஆசை காட்டி அழைத்து வந்தனர். தங்களை நம்பி வந்த பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன் அதை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி வந்தது அம்பலமானது. இதில் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இந்த விவகாரம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின் போது இந்த விவகாரம் வெளியில் வந்தது. இதைத்தொடர்ந்து எதிர் கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. பெண்கள் அமைப்புகள் கண்டன போராட்டங்களை முன்னெடுத்தன.
சிபிஐ விசாரணை
நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கில் முதலில் சபரி ராஜன்,வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பல தரப்பினரின் வேண்டுகோளை தொடந்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ மேற்கொண்ட விசாரணையில் அப்பொழுது அதிமுக நிர்வாகியாக இருந்த அருளானந்தம், ஹெரோன் பால், பைக் பாபு உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறை கைது செய்தது.