Seeman: ’சீமானுக்கு பிரபாகரன் விருந்து வைத்தது உண்மை!’ தமிழீழ அரசியல்துறை அறிக்கை!
தமிழீழத் தேசியத் தலைவரோடு போதிய நேரத்தைச் செலவிட்டதோடு, திரு. செந்தமிழன் சீமான் அவர்களுக்கு வழமையான விருந்தோம்பல் நிகழ்வும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் விருந்து வைத்தது உண்மை என தமிழீழ அரசியல்துறை அறிக்கை வெளியிட்டு உள்ளது. இது தொடர்பான விவரங்களை நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் இடும்பாவனம் கார்த்திக் தனது ‘எக்ஸ்’ தள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
அதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தமிழன் சீமான் அவர்களின் தமிழீழப் பயணம் மற்றும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுடனான சந்திப்புத் தொடர்பான, உண்மைகளைத் தெளிவூட்டும் அறிக்கையொன்றை வெளியிட வேண்டிய அவசியம் அனைத்து நாடுகளில் இயங்கிவரும். தமிழீழ அரசியல்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தப் பயணம் தொடர்பான உண்மைகளை, உரிய தருணத்தில் உறுதிப்படுத்த, நாம் தவறுவோமாயின் பேரெழுச்சியுடன் வளர்ந்து வரும் தமிழ்த்தேசியத்தைச் சிதைக்கக் கங்கணங்கட்டி நிற்கும். சில நாசகார சக்திகளின் சூழ்ச்சி வியூகக் கருத்தியல் மேலோங்கி, தமிழ்த்தேசியம் சிதைக்கப்படுவதை உலகெங்கும் வாழும் தமிழினச் செயற்பாட்டாளர்கள் எவரும் அனுமதிக்கமாட்டார்கள்.
துணிச்சலாக முன்னெடுத்து வருவதை பெருமிதம் கொள்கிறோம்!
2009 இல் தமிழீழத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும், தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் சனநாயக அரசியல் போராட்டமாகப் பரிணமித்தது. இதனைத் தொடர்ந்து அன்னைத் தமிழ்நாட்டில் திரு. செந்தமிழன் சீமான் அவர்களும் தனது இனவேர்கள் விரிந்து நிற்கும் தமிழீழத்தில் ஏற்பட்ட தமிழின அழிப்பின் தாக்கம் ஏற்படுத்திய வடுக்களைத் தொடர்ந்து, கடத்த 15 ஆண்டுகளாக தமிழீழத் தேசியத் தலைவரை தனது தலைவராக ஏற்றுக்கொண்டு. தமிழ்த் தேசியத்தின் விடிவையும் தமிழ் மக்களின் விடுதலையை வாழ்வின் இலட்சியமாகவும் வரித்துக் கொண்டு, தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்கும். அரசியல்ப் போரை மிகவும் துணிச்சலாக முன்னெடுத்து வருவதையெண்ணி நாம் பெருமிதம் கொள்கிறோம்.
பல போராளிகள் அறிவார்கள்!
உலகளாவிய ரீதியில் தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்காக தற்பணியாற்றும் துறைசார் வல்லுனர்களுக்கு கௌரவம் செலுத்துவது தமிழீழத் தேசியத் தலைவரின் உயரிய பண்பாடாகும் இந்த சீரிய மரபுக்கேற்ப தமிழகத்திலிருந்து பல தமிழினப் பற்றாளர்கள் தமிழீழக்கிற்கு அழைக்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டார்கள் அந்த அடிப்படையில் தான் திரு செந்தமிழன் சீமான அவர்களும் தேசியத் தலைவர் அவர்களால் இனங்காணப்பட்டு, அவரின் பணிப்பின் பேரில் நிதர்சனப் பொறுப்பாளர் மாவீரன் கேணல் சேரலாதன அவர்களுடாக தமிழீழத்திறகு அழைத்துவரப்பட்டார்.
திரு. செந்தமிழன் சீமான் அவர்கள், தமிழீழத்திற்கு வந்த காரணத்தையும், அங்கே இருந்த காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எந்தெந்த பிரிவுகளோடு தனது ஆற்றல்களைப் பகிர்ந்து கொண்டார் என்பதையும், முக்கியமாக இவர் ஓர் புரட்சிகரமான திரைப்பட இயக்குனராக இருந்த காரணத்தால், ஏற்கனவே தயாரிக்கத் திட்டமிட்டிருந்த, எல்லாளன் திரைப்படக் குழுவுக்கான திரைப்படத் துறைசார் பயிற்சிகளை வழங்குவதற்காக, காத்திரமான காலப்பகுதியை ஒதுக்கி, தமிழீழத்தில் தங்கியிருந்ததையும், அந்தவேளை பல கருத்தரங்குகளை நடாத்தப் பணிக்கப் பட்டிருந்தார் என்பதையும் பல போராளிகள் அறிவார்கள்.
பல போராளிகள் நேரடியாகச் சாட்சியங்களை வழங்குவதற்குத் தயார்!
மிக முக்கியமாக, தமிழீழத் தேசியத் தலைவரோடு போதிய நேரத்தைச் செலவிட்டதோடு, திரு. செந்தமிழன் சீமான் அவர்களுக்கு வழமையான விருந்தோம்பல் நிகழ்வும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது. இவற்றையெல்லாம் அருகிலிருந்து நேரடியாக அவதானித்த பல போராளிகள், எமது தமிழீழ அரசியல்துறையோடும், தங்களது துறைசார் கட்டமைப்புக்களோடும் இணைந்து பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றார்கள் மேலும் பல நிதர்சனப் போராளிகள் மற்றும் கலைஞர்கள் இன்றும் மேற்குறிப்பிட்ட சம்பவங்களுக்கெல்லாம் வாழும் சாட்சியங்களாக பல நாடுகளில் செயற்பட்டு வருகின்றனர் அவசியம் எனக் கருதும் பட்சத்தில் பல போராளிகள் நேரடியாகச் சாட்சியங்களை வழங்குவதற்குத் தயாராக உள்ளார்கள் என்பதை இந்த அறிக்கையூடாகத் தெரியப்படுத்துகிறோம்.
தமிழ்த் தேசியத்தை சிதைக்கக் கங்கணம்!
தமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கடந்த காலச் செயற்பாடுகள் தொடர்பாகவும், கருத்துத் தெரிவிக்கும் உரிமை தமிழீழ இலட்சியப் போராட்டத்தில், தமிழீழத் தேசியத் தலைவரோடு இணைந்து பணியாற்றிய போராளிகளுக்கும், தமிழீழத் தேசியத் தலைவரின் உயரிய சிந்தனையாகிய தமிழ்த்தேசிய விடுதலை என்ற உயரிய இலட்சிய பயணத்தை உயிர்ப்போடு தொடர்ந்து முன்னெடுக்கும் போராளிகளுக்கும் மட்டுமே உரித்துடையது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடந்த கால வரலாற்றில் குடும்ப அரசியலுக்கோ, வாரிசு அரசியலுக்கோ அறவே அனுமதிக்கப்பட்டது. கிடையாது. இவ்வாறிருக்கையில் திரு செந்தமிழன் சீமான் தொடர்பாகப் பேசுவதற்கு எதையுமே தமிழீழத்திலிருந்து அவதானிக்காது, ஸ்கன்டிநேவிய நாடாகிய டென்மார்கில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் உறவினரான திரு கார்த்திக் மனோகரன் எவ்வாறு ஊடகங்களில் செவ்வி வழங்கலாம்? இவர் சுயநலக காரணங்களுக்காக தமிழ்த் தேசியத்தை சிதைக்கக் கங்கணம் கட்டி நிற்போரின் சதிவலைப் பின்னலுக்குள் சிக்குண்டு செயற்படுவதை எம்மால் உணர் முடிகிறது.
அருகதையற்றவர்கள் என விமர்சனம்!
தமிழ்த்தேசியத்தைப் பாதுகாக்கும் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மீது அவதூறு பரப்பும் நாசகாரர்களின் திட்டங்களுக்குத் துணை நிற்கவேண்டாம் என சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் நாம் கேட்டுக்கொள்கிறோம். தமிழீத்தில் நாம் ஆற்ற வேண்டிய சமூகப் பொருளாதார அரசியல் பணிகளை முன்னிலைப்படுத்தும் சமநேரத்தில், தாயத் தமிழ்நாட்டு தமிழ்த்தேசிய மக்களின் அபிலாசைகளான மொழி, பண்பாடு, வரலாற்றைக் கடத்திச் செல்லும் திரு. செந்தமிழன் சீமான் அவர்களின் அரசியல் பணிகளுக்கு, உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் இணைந்து வலுச்சேர்க்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும். அன்புக்குரிய தமிழ் மக்களே, இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை விதைப்பவர்களின் தகுதி நிலையையும், இவர் போன்ற அருகதையற்றவர்களிடம் சேகரிக்கப்பட்ட செவ்விகளை ஒளிபரப்பும் சமூக வலைத்தளங்கள் மற்றும் பிரதான செய்தி ஊடகங்களினதும் ஆழமான உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு. விழிப்புணர்வோடு செயற்படுமாறு தமிழ்த்தேசியத்தை நேசிக்கும் உணர்வாளர்கள் அனைவரையும், தமிழீழ அரசியல்துறை அன்புரிமையோடு கேட்டுக்கொள்கிறது.
