Annamalai: ’ரெண்டே நாள்தான்! பாஜகவில் இணையும் பெரும் புள்ளிகள்!’ அண்ணாமலை சூசகம்!
”எங்களை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுக்கு கதவு மட்டுமல்ல; ஜன்னலும் திறந்துள்ளது. மோடி அவர்களையும், அவரது கனவையும் ஏற்றுக்கொள்ளும் எந்த கட்சியும் எங்களுடன் இணையலாம்”
பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில், அடுத்த இரண்டு மூன்று நாட்களில் மிகப்பெரிய புள்ளிகள் பாஜகவில் இணைய உள்ளனர். பாஜக வளர்ச்சி பாதையில் உள்ளதால் எல்லாம் வந்துக்கொண்டே இருக்கிறார்கள். ஏற்கெனவே பாஜகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் கட்சி வேலைகளை செய்ய தொடங்கிவிட்டனர்.
கட்சியில் இணையப்போவது யார் என்ற பெயரை நான் இப்போது சொல்லமாட்டேன். மக்கள் யாருக்கு அதிகாரம் கொடுத்துள்ளார்களோ, அவர்கள் பாஜகவில் இணைவார்கள்.
ரவுடி பட்டியலில் இருப்பவர்கள் பாஜகவில் இணைகிறார் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சொல்கிறார். அவரே ரவுடி பட்டியலில் இருந்தவர்.
சட்டமன்றத்தில் நேரலை செய்யாமல் இருட்டடிப்பு செய்கிறார். அப்பாவு அவர்கள், பாஜக எம்.எல்.ஏக்கள் பேசுவதற்கு நேரம் தருவதில்லை. திமுக அமைச்சர்கள் பதில் சொல்வதற்கு முன் அவர் பதில் சொல்கிறார். அப்பாவு அவர்கள் நடுநிலையான சபநாயகராக உள்ளாரா என்பதுதான் எங்கள் கேள்வியாக உள்ளது.
மத்திய அரசு பணம் தரவில்லை என திமுக அரசியல் செய்து வருகிறது. காப்பீட்டு திட்டப்பணத்தை இன்னும் விவசாயிகளுக்கு திமுக தரவில்லை; ஆனால் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு தந்துவிட்டது.
பாஜக இருக்கும் கூட்டணி வலிமையான கூட்டணி மட்டுமல்ல; வெற்றி கூட்டணி. எங்களை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுக்கு கதவு மட்டுமல்ல; ஜன்னலும் திறந்துள்ளது. மோடி அவர்களையும், அவரது கனவையும் ஏற்றுக்கொள்ளும் எந்த கட்சியும் எங்களுடன் இணையலாம்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவு மாற்றத்திற்கானது. தமிழ்நாடு மக்கள் மாற்றத்திற்காக காத்து கொண்டிருக்கின்றனர். அதிகப்படியாக நான் பேசுவதைவிட, வாக்குகள் பேசும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.