Avadi SM Nasar: ‘மகனால் பறிபோனதா மந்திரி பதவி?’ இளைஞரணி காலத்து நட்புக்கு ‘குட் பை’ சொன்ன முதல்வர்!
‘‘திமுக தலைமையில் தந்தைகள் பெற்றுள்ள செல்வாக்கு காரணமாக அவர்களின் வாரிசுகள் பதவிக்கு வந்துள்ளார்கள் என்ற விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் வைப்பது வழக்கம். ஆனால் இந்த நிகழ்வுகளுக்கு மாறாக தனது அரசியல் வாரிசின் செயலால் அமைச்சர் பதவியை பறிகொடுத்துள்ளார் ஆவடி சா.மு.நாசர்”.
தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் விடுவிக்கப்பட்டு புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார். நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு கிண்டி ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா பொறுப்பேற்கிறார். அவருக்கு எந்த இலாகா ஒதுக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு அவரின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பிறகு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோட்டை வட்டாரத்தில் முனுமுனுப்பு
திமுக இளைஞரணி செயலாளராக மு.க.ஸ்டாலின் இருந்த காலம் தொட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருந்த ஆவடி சா.மு.நாசருக்கு அமைச்சரவையில் இருந்து கல்தா கொடுக்கப்பட்டுள்ளது. ஆவடி நாசர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்ற தகவல் கடந்த சில நாட்களாக கோட்டை வட்டாரத்தில் முனுமுனுக்கப்பட்டு வந்த நிலையில் இந்த தகவல் தற்போது மெய்ப்பிக்கப்பட்டு உள்ளது.
இலாகா பறிக்கப்பட்ட முதல் நபர்
தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளை கடந்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் இரண்டு முறை அமைச்சரவை மாற்றம் நடந்துள்ளது. இந்த இரண்டு அமைச்சரவை மாற்றங்களிலுமே அமைச்சர்களுக்கு இலாகா மாற்றங்கள் நடந்துள்ளதே தவிர ஒருவர் கூட அமைச்சரவையில் இருந்து நீக்கப்படவில்லை. தற்போது இதில் முதல் ஆளாக இணைந்துள்ளார் ஆவடி சா.மு.நாசர்.
வாரிசு அரசியல்
திமுகவை பொறுத்தவரை கிளைச்செயலாளர் பதவி தொடங்கி திமுக தலைவர் பதவி வரை வாரிசுகளுக்கே பதவிகள் வழங்கப்பட்டுவருவதாக அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் சுமத்துவது வழக்கம்.
தமிழ்நாடு அமைச்சரவையில் எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தியின் மகன் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் மகன் தங்கம் தென்னரசு, முதலமைச்சர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின், மறைந்த தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பெரியசாமியின் மகள் கீதா ஜீவன், முன்னாள் எம்.எல்.ஏ சிவசுப்பிரமணியன் மகன் எஸ்.எஸ்.சிவசங்கர், முன்னாள் சபாநாயகர் பிடிஆர் பழனிவேல் ராசனின் மகன் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ அன்பில் பொய்யாமொழியின் மகன் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் வாரிசு அமைச்சர்களாக உள்ளனர்.
மகுடம் பறித்த வாரிசு
இதன் காரணமாக திமுக தலைமையில் தந்தைகள் பெற்றுள்ள செல்வாக்கு காரணமாக அவர்களின் வாரிசுகள் பதவிக்கு வந்துள்ளார்கள் என்ற விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் வைப்பது வழக்கம்.
ஆனால் இந்த நிகழ்வுகளுக்கு மாறாக தனது அரசியல் வாரிசின் செயலால் அமைச்சர் பதவியை பறிகொடுத்துள்ளார் ஆவடி சா.மு.நாசர்.
யார் இந்த சா.மு.நாசர்?
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியை சேர்ந்த ஆவடி.சா.மு.நாசர் அரைக்கால் சட்டை போட்ட பள்ளி காலத்தில் இருந்தே மானசீகமாக தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டவர்.
தமிழ்நாட்டில் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்திய 1967 தேர்தலில் ‘காமராசர் அண்ணாச்சி கடுகு விலை என்னாச்சு...! பக்தவச்சலம் அண்ணச்சி பருப்பு விலை என்னாச்சு’ என்று சாலையில் கோஷம் எழுப்பி உதயசூரியனுக்கு ஓட்டுக்கேட்டதால் பள்ளி டீச்சரிடம் அடிவாங்கியவர்.
இளைஞரணி காலத்து நட்பு
1980களில் திமுகவின் இளைஞரணி செயலாளராக மு.க.ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்ட நிலையில் அன்றைய ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்ட இளைஞரணியில் முக்கிய நிர்வாகியாக இருந்ததுடன் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளும் சுற்றுப்பயணங்களிலும் பக்கத்துணையாய் இருந்தவர்.
கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆவடி நகராட்சி சேர்மேனாக இருந்த ஆவடி நாசர் திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளராகவும் உள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாஃபா பாண்டியராஜனிடம் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற ஆவடி நாசர் அடுத்து நடந்த 2021 தேர்தலில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் மாஃபா பாண்டியராஜனை வீழ்த்தி வென்றார்.
இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்
இந்த நிலையில் தனது அமைச்சரவையில் பால்வளத்துறையை கொடுத்து நாசருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார் மு.க.ஸ்டாலின்.
அமைச்சரான சிலநாட்களிலேயே தீபாவளி நேரத்தில் 1.5 டன் இனிப்புகளை முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தனது வீட்டுக்கு எடுத்து சென்றுவிட்டார்” எனக்கூறி ஊடகங்களில் லைம் லைட்டுக்கு வந்தார் நாசர்.
சர்ச்சைகள்
கிறித்தவர்கள் ஜெபத்தாலேயே திமுக ஆட்சிக்கு வந்துள்ளதாக பேசிய பேச்சு விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில் கிறித்தவர்களை உற்சாகப்படுத்தவே அப்படி செய்தேன் என்றார்.
திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நாற்காலி எடுத்து வர தாமதமானதால் கீழே கிடந்த கல்லை எடுத்து தொண்டரை நோக்கி ஆவடி நாசர் வீசும் வீடியோ கடும் கண்டனங்களை பெற்றுக் கொடுத்திருந்தது.
ஆசிம்ராஜா ஆடிய ஆட்டம்
இதற்கெல்லாம் மகுடம் வைக்கும் விதமாக அமைச்சர் நாசரின் மகன் ஆசிம்ராஜா ஆடிய ஆட்டம்தான் பதவிபறிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக பேசப்படுகிறது.
ஆவடி மாநகர செயலாளராகவும், ஆவடி மாநகராட்சியின் 4ஆவது வார்டு கவுன்சிலராகவும், பணிக்குழு தலைவராகவும் உள்ள ஆசிம்ராஜா ஆவடி மேயரை (தனி) தாண்டி டெண்டர் விவகாரங்களில் தனி ஆவர்தனம் செய்து வருவதாக புகார்கள் தலைமைக்கு குவிந்தது. ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைக்காக மாநகராட்சி ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைத்த சம்பவம் கடும் கண்டனங்களை பெற்றுத்தந்தது.
இதற்கெல்லாம் மேலாக ஆவடியில் உள்ள 5ஆவது காவல் பெட்டாலியனுக்கு சொந்தமான இடத்தில் திமுகவின் கொடியை நட்டு தொடந்து கடைகள் போடப்பட்டது. இதற்கு பின்னணியில் ஆசிம்ராஜா இருந்ததாக உளவுத்துறை முதல்வருக்கு செய்தி அனுப்பிய நிலையில், முதலமைச்சரின் கட்டுப்பட்டில் உள்ள காவல்துறை நிலத்தையே ஆக்கிரமிப்பு செய்த புகார் காரணமாக ஆசிம்ராஜாவின் மாநகர செயலாளர் பொறுப்பு பறிபோனது.
இந்த நிலையில் பால் வளத்துறையில் சில நிர்வாக பிரச்னைகள் காரணமாக பால் கொள்முதல் மற்றும் விநியோகத்தில் சிக்கல்கள் உள்ளதாக தொடந்து செய்திகள் வெளியானது. மேற்கண்ட பிரச்னைகள் காரணமாக அமைச்சரவையில் இருந்து ஆவடி நாசர் விடுவிக்கப்பட்டுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.