Modi Roadshow: கோவையில் மோடி பங்கேற்க இருந்த பேரணிக்கு போலீஸ் அனுமதி மறுப்பு! என்ன காரணம் தெரியுமா?
”Road show: இந்த நிலையில் பிரதமரின் வாகன பேரணிக்கு அனுமதி தரக்கோரி உயர்நீதிமன்றத்தை நாட பாஜக திட்டமிட்டுள்ளது”
கோவையில் வரும் மார்ச் 18ஆம் தேதி திட்டமிடப்பட்ட பிரதமர் மோடி கலந்து கொள்ளவிருந்த வாகன பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கையை காவல்துறை எடுத்துள்ளதாக கூறி உள்ள நிலையில் நீதிமன்றத்தை நாட பாஜக திட்டமிட்டுள்ளது.
வரும் மார்ச் 18ஆம் தேதி திங்கள் அன்று கோவையில் உள்ள கவுண்டம் பாளையம் முதல் ஆர்.எஸ்.புரம் வரை 3 கிமீ தூர ரோட்ஷோவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார். இது தொடர்பான அனுமதி கடிதம் கோவை மாவட்ட பாஜக சார்பில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் நேற்று இரவு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதம் கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இந்த நிலையில், பிரதமருக்கு பாதுகாப்பு வழங்க கூடிய எஸ்பிஜி, கோவை மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதமர் மோடியின் ரோட் ஷோவுக்கு அனுமதி மறுத்துள்ளது குறித்து மூன்று காரணங்களை காவல்துறை கூறி உள்ளது. கோவையை பொறுத்தவரை இதுவரை எந்த ரோட்ஷோ நிகழ்ச்சிக்கும் காவல்துறை அனுமதி கொடுத்தது கிடையாது. ஏற்கெனவே கோவையில் கார் குண்டுவெடிப்பு நடந்துள்ளதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. மேலும் பொதுத் தேர்வுகள் நடைபெறுவதால் தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் பாதிக்க வாய்ப்புள்ளது ஆகிய மூன்று காரணங்களை காவல்துறை கூறி உள்ளது. இந்த நிலையில் பிரதமரின் வாகன பேரணிக்கு அனுமதி தரக்கோரி உயர்நீதிமன்றத்தை நாட பாஜக திட்டமிட்டுள்ளது.
பிரதமரின் தொடர் தமிழக பயணம்!
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழ்நாட்டில் தொடர் சுற்றுப்பயணங்களை பிரதமர் மோடி மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜனவரி மாதம் தொடங்கி தற்போது வரை 5 முறை தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ளார். மேலும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டங்களிலும் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றி இருந்தார்.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்திலும் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அதில், அப்போது, நாடு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீது திமுகவுக்கு வெறுப்பு இருக்கிறது. "தமிழகத்தின் எதிர்காலம் மற்றும் கலாச்சாரத்தின் எதிரி திமுக. அயோத்தி ராமர் கோவில் 'பிரான் பிரதிஷ்டை' விழாவுக்கு முன், நான் தமிழகம் வந்து, மாநிலத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு சென்றேன் என பிரதமர் மோடி கூறினார்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை ஒளிபரப்புவதை திமுக அரசு நிறுத்த முயற்சித்தது. ஆனால் அதற்கு உச்சநீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்தது. புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைத்தது திமுகவுக்கு பிடிக்கவில்லை. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற வழிவகுத்தது நமது அரசுதான் என பிரதமர் மோடி கூறினார்.
இந்த முறை தமிழகத்தில் பாஜகவின் செயல்பாடு திமுக-காங்கிரஸ் கூட்டணியின் ஆணவத்தை தகர்த்தெறியும் என்ற அவர், பாஜகவிடம் மக்களுக்குக் காட்டுவதற்கான வளர்ச்சி முயற்சிகள் இருந்தாலும், எதிர்க்கட்சிகளின் ஊழல்களின் பட்டியல் பெரியது என்றார்.
திமுகவும், காங்கிரஸும் பெண்களுக்கு எதிரானவை என்றும், பெண்களை முட்டாளாக்கி அவமானப்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டிய மோடி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மத்திய அரசு பல முயற்சிகளை துரிதமாக செயல்படுத்தி வருவதாக கூறினார்.