’குடிநீர் வாரியத்தில் நவீன மஸ்டர் ரோல் ஊழல்’ விளாசும் அன்புமணி ராமதாஸ்!
”கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஊழல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அதற்கு காரணமானவர்கள் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது”

குடிநீர் வாரியத்தில் நவீன மஸ்டர் ரோல் ஊழல் மூலம் ஆண்டு தோறும் ரூ.90 கோடி சுருட்டப்படுவது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை 40% முதல் 50% வரை குறைத்துக் கொடுப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.90 கோடி ஊழல் நடைபெறுவதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஊழல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அதற்கு காரணமானவர்கள் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.
குடிநீர் வாரியத்தில் மின்னியலாளர்கள் ( எலக்ட்ரீஷியன்கள்), நீரேற்றும் மோட்டார் இயக்குபவர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் என மொத்தம் 11, 597 பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் குடிநீர் வாரியத்தால் நேரடியாக நியமிக்கப்படாமல், ஒப்பந்ததாரர்கள் மூலம் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கான ஊதியம் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் மூலமாக பணியாளர்களுக்கு அனுப்பப்படுகிறது. ஒவ்வொரு தொழிலாளருக்கும் குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.15,401 அல்லது அதற்கும் கூடுதலான தொகையை பெற்றுக்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் அதில் ரூ.7500 முதல் ரூ.9800 வரை மட்டுமே ஊதியமாக வழங்கிவிட்டு மீதத்தொகையை சுருட்டி விடுகின்றனர் என்பது தான் குற்றச்சாட்டு ஆகும்.