'ஆந்திராவும், கர்நாடகாவும் மாம்பழ உழவர்களைக் காக்கின்றன: தமிழக அரசு பச்சைத் துரோகம் செய்கிறது!' அன்புமணி
”மாம்பழங்கள் மாம்பழக் கூழ் ஆலைகளால் கொள்முதல் செய்யப்படுவதையும், அவற்றுக்கு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். ஏற்கனவே அறுவடை செய்து பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு குறைந்தது ரூ.30 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்”

மாம்பழ விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு பச்சைத் துரோகம் செய்துவிட்டதாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.
கர்நாடகத்தில் மாம்பழ விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாம்பழ உழவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், அவர்களிடமிருந்து 2.5 லட்சம் டன் மாம்பழங்களை கூட்டாக கொள்முதல் செய்யவும், அவற்றுக்கு டன்னுக்கு ரூ.4000 ஊக்கத் தொகை வழங்கவும் கர்நாடக அரசும், மத்திய அரசும் கூட்டாக முடிவு செய்திருக்கின்றன. கர்நாடக உழவர்களுக்கு பயனளிக்கக் கூடிய இந்த ஏற்பாடு வரவேற்கத்தக்கதாகும்.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கடிதம் எழுதியது உள்ளிட்ட பல வழிகளில் அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து மத்திய அமைச்சரும், கர்நாடக வேளாண் துறை சாலுவராயசாமியும் நடத்தியப் பேச்சுகளில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடக மாநில மாம்பழ வளர்ச்சி மற்றும் வாணிபக் கழகம் மூலம் மாம்பழங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான கர்நாடக உழவர்கள் பயனடைவார்கள்.