கழன்று ஓடிய சக்கரங்கள்! ’அரசு எப்படியோ, அப்படியே அரசு பேருந்துகளும்’ விளாசும் அன்புமணி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  கழன்று ஓடிய சக்கரங்கள்! ’அரசு எப்படியோ, அப்படியே அரசு பேருந்துகளும்’ விளாசும் அன்புமணி!

கழன்று ஓடிய சக்கரங்கள்! ’அரசு எப்படியோ, அப்படியே அரசு பேருந்துகளும்’ விளாசும் அன்புமணி!

Kathiravan V HT Tamil
Published Jun 21, 2025 12:34 PM IST

“அரசு எவ்வாறு அச்சாணி இல்லாமல் இயங்குகிறதோ, அதே போல் தான் அரசுப் பேருந்துகளும் எந்த பிணைப்பும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றன”

கழன்று ஓடிய சக்கரங்கள்! ’அரசு எப்படியோ, அப்படியே அரசு பேருந்துகளும்’ விளாசும் அன்புமணி!
கழன்று ஓடிய சக்கரங்கள்! ’அரசு எப்படியோ, அப்படியே அரசு பேருந்துகளும்’ விளாசும் அன்புமணி!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் கிராமத்தில் அரசு பேருந்து ஒன்றின் பின்புற அச்சு உடைந்து, இரு பின் சக்கரங்கள் கழன்று ஓடிய சம்பவம் குறித்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசு மற்றும் அதன் பேருந்து நிர்வாகத்தின் அலட்சியத்தை கடுமையாக சாடியுள்ளார்.

சம்பவத்தின் விவரம்

அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில், “கடையநல்லூர் அருகே இடைகால் கிராமத்தில் ஓடிக் கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்புற அச்சு உடைந்து, இரு பின் சக்கரங்கள் தனியாகக் கழன்று ஓடியுள்ளன. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்தனர். ஆனால், ஓட்டுநரின் திறமையால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது,” என்று குறிப்பிட்டார். இச்சம்பவம் அரசு பேருந்துகளின் பராமரிப்பு குறைபாடுகளை வெளிப்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அரசு பேருந்துகளின் அவலநிலை

அரசு பேருந்துகளின் மோசமான நிலை குறித்து கடுமையாக விமர்சித்த அன்புமணி, “சக்கரங்கள் கழன்று ஓடுவதும், இருக்கைகள் உடைந்து வெளியே தெறிப்பதும் அரசு பேருந்துகளில் அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. அரசு எவ்வாறு அச்சாணி இல்லாமல் இயங்குகிறதோ, அதேபோல் அரசு பேருந்துகளும் எந்த பிணைப்பும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றன,” என்று கூறினார். தமிழக அரசின் அலட்சியமான பேருந்து நிர்வாகத்தை அவர் “திராவிட மாடல்” அரசின் தோல்வியாக விமர்சித்தார்.

அரசின் பொறுப்பற்ற தன்மை

விபத்துகளுக்கு பின்னர் அரசு எடுக்கும் நடவடிக்கைகளை அன்புமணி கேள்விக்குள்ளாக்கினார். “ஒவ்வொரு பேருந்து விபத்து நிகழும்போதும், ஓட்டுநர், நடத்துநர் அல்லது தொழில்நுட்பப் பணியாளர் மீது பழி சுமத்தி, அவர்களை பணியிடைநீக்கம் செய்து அரசு தனது கடமையை முடித்துக் கொள்கிறது. இது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் தீர்வாகாது,” என்று அவர் குற்றம்சாட்டினார்.

பேருந்துகளும், ஆட்சியும் மாற வேண்டும்

அரசு பேருந்துகளின் விபத்துகளைத் தடுக்க, உடனடி நடவடிக்கைகள் தேவை என்று வலியுறுத்திய அன்புமணி, “பயணிகளை பாதிக்கும் விபத்துகளை ஏற்படுத்தும் பேருந்துகள் மாற்றப்பட வேண்டும். அதேபோல், தமிழ்நாட்டை சீரழிக்கும் திராவிட மாடல் அரசும் மாற வேண்டும். இதுவே விபத்தில்லா பயணத்திற்கும், சிறந்த அரசு நிர்வாகத்திற்கும் எளிய தீர்வாகும்,” என்று தனது அறிக்கையில் தெரிவித்தார்.