கர்நாடகாவை போலவே தமிழ்நாட்டிலும் புகைக்கும் வயதை 21ஆக்க வேண்டும்: அன்புமணி!
”இந்தியா முழுவதிலும், குறிப்பாக தமிழ்நாட்டில் புகைப்பிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை உடனடியாக 21 ஆக உயர்த்த வேண்டும்; அதன்பின் ஆண்டுக்கு ஒரு வயது உயர்த்த வேண்டும் என்பது தான் எனது கனவு ஆகும்”

கர்நாடக மாநிலத்தை போலவே தமிழ்நாட்டிலும் புகைக்கும் வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகத்தில் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது 21 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் கர்நாடக அரசு இயற்றியுள்ள இந்தச் சட்டம் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் முன்னோடி மாநிலம் என்று கூறிக் கொள்ளும் தமிழகம், பல நூறு முறை வலியுறுத்தியும் கூட இத்தகைய சட்டங்களை இயற்ற மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசின் சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருள்கள் சட்டத்தின் 4, 4ஏ ஆகிய பிரிவுகளைத் திருத்தி கர்நாடக சட்டப்பேரவையில் புதிய சட்டத்திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. அதன் மூலம் கர்நாடக மாநிலம் முழுவதும் பொது இடங்களில் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது; அதேபோல், இதுவரை 18 ஆக இருந்த புகைப்பிடிப்பதற்கான வயது 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது; இந்தக் குற்றங்களுக்காக விதிக்கப்படும் தண்டம் 200 ரூபாயிலிருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் திருத்தங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியதையடுத்து கர்நாடகத்தில் இச்சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது.