சட்டப்பேரவையில் திமுகவின் ஏஜெண்ட்டாக செயல்பட்டாரா ஆளுநர்? சந்தேகம் கிளப்பும் அன்புமணி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  சட்டப்பேரவையில் திமுகவின் ஏஜெண்ட்டாக செயல்பட்டாரா ஆளுநர்? சந்தேகம் கிளப்பும் அன்புமணி!

சட்டப்பேரவையில் திமுகவின் ஏஜெண்ட்டாக செயல்பட்டாரா ஆளுநர்? சந்தேகம் கிளப்பும் அன்புமணி!

Kathiravan V HT Tamil
Jan 06, 2025 01:07 PM IST

விவாதிக்கப்படுவதற்கும், செயல்படுத்தப்படுவதற்கும் ஏராளமான விவகாரங்கள் உள்ளன. அவற்றை விடுத்து, கவனத்தை திசைதிருப்பும் வகையிலான எந்த செயலையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவை தவிர்த்திருக்கப்பட வேண்டும் என அன்புமணி கருத்து

சட்டப்பேரவையில் திமுகவின் ஏஜெண்ட்டாக செயல்பட்டாரா ஆளுநர்? சந்தேகம் கிளப்பும் அன்புமணி!
சட்டப்பேரவையில் திமுகவின் ஏஜெண்ட்டாக செயல்பட்டாரா ஆளுநர்? சந்தேகம் கிளப்பும் அன்புமணி!

உரையை வாசிக்காமல் வெளியேறிய ஆளுநர்

தமிழ்நாடு சட்டப்பேரவை ஆளுநர் உரை உடன் இன்று தொடங்குவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சிகாக தலைமை செயலகம் வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.

சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. பின்னர் அதிமுக உறுப்பினர்கள் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழ்நாடு அரசை கண்டித்தும், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும், தவாக தலைவர் வேல்முருகனும், அண்ணா பல்கலைக்கழகத்தில் துணை வேந்தரை நியமனம் செய்யாததை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

இதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். ஆனால் நிகழ்ச்சியின் நிறைவு பகுதியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கும் மரபு உள்ளதால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேசிய கீதம் வாசிக்கப்படவில்லை.

இதனை காரணம் காட்டி ஆளுநர் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார். இதனை அடுத்து ஆளுநர் வாசிக்க வேண்டிய உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

ராஜ்பவன் தரப்பில் விளக்கம்

இது தொடர்பாக ராஜ்பவன் தரப்பில் ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அதில் “தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும்.

அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது. இன்று ஆளுநர் அவர்கள் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் அவர்கள் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும் மாண்புமிகு சட்டப்பேரவை சபாநாயகர் அவர்களிடமும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் அவர்கள் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்.” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அன்புமணி ராமதாஸ் ட்வீட்

இந்த நிகழ்வுகள் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்வீட் செய்து உள்ளார். அதில். தமிழ்நாட்டின் மரபுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் ஆளுனர் புரிந்து கொள்ள வேண்டும். ஆளுனருக்கு உரிய மரியாதை அரசு அளிக்க வேண்டும்.

 தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு , பெண்களுக்கு பாதுகாப்பு, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள், உழவர்களின் எண்ணிக்கையிலடங்காத கோரிக்கைகள், பட்டியலின மக்களின் தேவைகள் என விவாதிக்கப்படுவதற்கும், செயல்படுத்தப்படுவதற்கும் ஏராளமான விவகாரங்கள் உள்ளன. அவற்றை விடுத்து, கவனத்தை திசைதிருப்பும் வகையிலான எந்த செயலையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவை தவிர்த்திருக்கப்பட வேண்டும் என கூறி உள்ளார்.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.