ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு முன்பே நிர்வாகக் காரணம் கூறி முறைகேடாக மாறுதல் தருவதா? - அன்புமணி கண்டனம்
பொதுமாறுதல் கலந்தாய்வை வெளிப்படையான முறையில் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பொது இட மாறுதல் கலந்தாய்வுக்கான தேதி கூட இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தென் மாவட்டங்களில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களில் விதிகளை மீறி ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. முறைகேடாக மேற்கொள்ளப்படும் இந்த இடமாறுதல்கள் சட்டவிரோதமானவை; கண்டிக்கத்தக்கவை என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," பொதுமாறுதல் கோரும் ஆசிரியர்கள் அதற்காக கடந்த 19-ஆம் தேதி முதல் இன்று 25-ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான காலக்கெடுவே இன்னும் முடிவடையவில்லை. காலக்கெடு முடிவடைந்த பிறகு தான் காலியாக உள்ள இடங்கள் பட்டியலிடப்பட்டு, இட மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்களின் முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவற்றின் அடிப்படையில் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இது தான் வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறை.
ஆனால், அதற்கு முன்பாகவே தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தான் நிர்வாக மாறுதல் அடிப்படையில் கொல்லைப்புறமாக காலியிடங்கள் வேகமாக நிரப்பப்பட்டு வருகின்றன. இதேநிலை நீடித்தால் பொதுமாறுதல் கலந்தாய்வின் போது இந்த மாவட்டங்களில் நிரப்புவதற்கு காலியிடங்களே இருக்காது. இது இட மாறுதலுக்கான தகுதியும், தேவையும் கொண்டவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.