’குற்றத்தை தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு’ விளாசும் அன்புமணி ராமதாஸ்!
கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களைத் தடுத்து தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க முடியாமல் திமுக அரசு குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கிறது. இனியாவது திமுக அரசு அதன் உறக்கத்தைக் கலைத்து தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குற்றத்தை தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
மதுரை கொலை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் என்ற ரவுடி நள்ளிரவில் அவரது வீட்டு வாயிலில் வைத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் திட்டமிட்ட படுகொலைகள் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் அதைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
மேலும் படிக்க:- டாப் 10 தமிழ் நியூஸ்: 10 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை முதல் மதுரையில் ரவுடி வெட்டிக் கொலை வரை!
கொலை செய்யப்பட்ட காளீஸ்வரன் மதுரை மாநகர திமுக நிர்வாகி வி.கே.குருசாமியின் உறவினர் ஆவார். அவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. காளீஸ்வரனுக்கும், அவரது எதிர் குழுவினருக்கும் இடையே தொடர்ந்து நடந்து வரும் மோதலில் இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாகவே இந்த படுகொலையும் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. காளீஸ்வரனின் எதிரிகள் சிறையில் இருந்த படியே சதித்திட்டம் தீட்டி இந்தக் கொலையை நடத்தியிருப்பதாகவும் தெரிகிறது.
