’பாமக தலைவர் ஆன உடனேயே என் நிம்மதியை இழந்துவிட்டேன்’ அன்புமணி ராமதாஸ் வேதனை!
”ஒரு காலத்தில் சுதந்திரமாகச் செயல்பட்ட தான், தலைவர் பொறுப்பை ஏற்ற நாளில் இருந்தே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக இந்தச் சுமையை தான் கடந்து வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்”

பாமக தலைவர் பதவியை ஏற்றதில் இருந்து மன நிம்மதி போய்விட்டதாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
தர்மபுரியில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சி கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் உருக்கமாக பேசியுள்ளார். பா.ம.க. தலைவர் பதவியை ஏற்றதிலிருந்து தனது மனநிம்மதி போய்விட்டதாகக் குறிப்பிட்ட அவர்,தன்மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் 100 விழுக்காடு பொய்யானவை என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.
மன உளைச்சலும் பொறுப்பின் சுமையும்
அன்புமணி ராமதாஸ் தனது பேச்சில், "சமீப கடந்த ஒரு இரண்டு மாதங்களாக எனக்கு மிகுந்த மன உளைச்சல், உங்களுக்கெல்லாம் தெரியும். இன்னும் சொல்லப்போனால் என்னைக்கு நான் தலைவர் பொறுப்பை ஏற்றோனோ, அன்று முதல் எனக்கு மனநிம்மதி போய்விட்டது" என்று வருத்தத்துடன் தெரிவித்தார். ஒரு காலத்தில் சுதந்திரமாகச் செயல்பட்ட தான், தலைவர் பொறுப்பை ஏற்ற நாளில் இருந்தே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக இந்தச் சுமையை தான் கடந்து வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.