’40 ஆயிரம் கோடிக்கு மின் கட்டணம் உயர்த்திய பிறகும் 4435 கோடி நஷ்டமா?’ அன்புமணி எழுப்பும் கேள்வி!
மின்சார வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் மின்சார வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவது ஏன்? என்பது குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும்

ரூ.40 ஆயிரம் கோடி மின் கட்டணம் உயர்த்திய பிறகும் ரூ.4435 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ள நிலையில் மின்வாரிய ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
லாபம் ஈட்டாதது ஏன்?
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.4435 கோடி இழப்பை சந்தித்து இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில் மின்சார வாரியம் லாபம் ஈட்டும் நிலையை எட்டாதது ஏன்? என்ற வினா தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் எதிரொலிக்கிறது.
10,000 கோடி இழப்பு
தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதற்கு முன் கடந்த 2021- 22 ஆம் ஆண்டில் மின்சார வாரியத்தின் வருவாய் சுமார் ரூ.54,000 கோடியாக இருந்தது. அப்போது மின்சார வாரியத்தின் இழப்பு சுமார் ரூ.9 ஆயிரம் கோடி இருந்தது. 2022 -ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டணம் 30% விழுக்காடுக்கு மேலாக உயர்த்தப்பட்டதன் காரணமாக ஆண்டுக்கு சுமார் ரூ.31,500 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. அதன்படி பார்த்தால் 2022-23 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியம் சுமார் ரூ.15,000 கோடி லாபம் ஈட்டியிருக்க வேண்டும். ஆனால் அந்த ஆண்டில் மின்சார வாரியம் சுமார் ரூ.10,000 கோடி இழப்பை எதிர்கொண்டது.