’நிலத்தடி நீரில் 115 மடங்கு அதிக பாதரசம்: ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி, என்.எல்.சிக்கு ஒரு நீதியா?' அன்புமணி கேள்வி!
மக்களின் உடல் நலத்திற்கும் ஸ்டெர்லை ஆலை ஏற்படுத்திய தீங்குகளை விட பலமடங்கு அதிக கேட்டை என்.எல்.சி ஏற்படுத்தியிருக்கிறது என்பது மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதை தமிழக அரசு இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறதா?

என்.எல்.சி சுரங்க பகுதிகளில் நிலத்தடி நீரில் 115 மடங்கு அதிக பாதரசம் கலந்து உள்ளதாக ஆய்வில் தெரிய வந்து உள்ள நிலையில், ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி, என்.எல்.சிக்கு ஒரு நீதியா? என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
நிலத்தடி நீரில் அதிக பாதரசம்
இது தொடர்பாக அன்புணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் மின் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மற்றும் நீர் நிலைகளில் உள்ள தண்ணீரில் இயல்பை விட 115 மடங்கு கூடுதலாக பாதரசம் கலந்திருப்பது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. என்.எல்.சி நிறுவனத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் அப்பகுதியில் மனிதர்கள் வாழ முடியாத நிலை உருவாகியுள்ள சூழலில், மக்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததது கவலையளிக்கிறது.
என்எல்சியின் சுரங்கங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களால் அப்பகுதியில் வாழும் மக்களின் உடல் நலனுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் ஆணையிட்டிருந்ததன் அடிப்படையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், வானதிராயபுரம் பகுதியில் அனுமதிக்கப்பட்டதை விட 62 மடங்கும், பக்கிங்காம் கால்வாய் பகுதியில் அதிக அளவாக 115 மடங்கும் கூடுதலாக பாதரசம் இருப்பது தெரியவந்துள்ளது.