’தந்தைப் பெரியாரின் புகழ் வெளிச்சத்தை அரைகுறை அவதூறால் மறைக்க முடியாது’ சீமானை சாடும் அன்புமணி!
பெரியாரை போற்றுவதற்கு ஆயிரமாயிரம் காரணங்கள் இருக்கும் நிலையில், அவற்றை பயன்படுத்திக் கொள்ளாமல் பெரியாரை சிறுமைப்படுத்தும் வகையிலான எந்த செயலையும் பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது.

தந்தைப் பெரியாரின் புகழ் வெளிச்சத்தை அரைகுறை அவதூறால் மறைக்க முடியாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தந்தைப் பெரியாரின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில், அவரைப் பற்றி அடிப்படை இல்லாத அவதூறுகள் பரப்பப்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும். பெரியாரை போற்றுவதற்கு ஆயிரமாயிரம் காரணங்கள் இருக்கும் நிலையில், அவற்றை பயன்படுத்திக் கொள்ளாமல் பெரியாரை சிறுமைப்படுத்தும் வகையிலான எந்த செயலையும் பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது.
இந்திய விடுதலைப் போராட்டத்தின் கதாநாயகர் மகாத்மா காந்தி என்றால், தமிழ்நாட்டின் சமூக விடுதலைப் போராட்டத்தின் கதாநாயகன் தந்தைப் பெரியார் அவர்கள் தான். தமிழ்நாட்டில் செண்பகம் துரைராஜன் வழக்கில் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட போது, சமூகநீதியைக் காப்பதற்காக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி கண்டவர் தந்தைப் பெரியார் தான். சட்டநாதன் ஆணையத்தின் பரிந்துரைப்படி, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க கலைஞர் அரசு மறுத்த போது, அதைக் கண்டித்ததுடன், அரசுக்கு அழுத்தம் கொடுத்து இட ஒதுக்கீடு 31% ஆக உயர்த்தப்படுவதற்கு காரணமாக இருந்தவர் தந்தைப் பெரியார். அதனால் தான் அவரை கொள்கை வழிகாட்டியாக பாட்டாளி மக்கள் கட்சி ஏற்றிருக்கிறது.