’மேகதாது அணை கட்ட முயலும் கர்நாடகா! பாலைவனமாகும் காவிரி படுகை!’ மத்திய, மாநில அரசுகளை விளாசும் ராமதாஸ்!
மேகதாது அணை கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 184 டிஎம்சியாக அதிகரிக்கும். மேட்டூர் அணை கொள்ளளவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு தண்ணீரை கர்நாடகம் தேக்கி வைத்தால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது. காவிரி படுகை பாலைவனமாகிவிடும்.

மேகதாது அணை விவகாரத்தில், அனைத்து அனுமதிகளையும் மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
கண்டிக்கத்தக்கது
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைக் கட்டுவதற்கான ஆயத்தப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாகவும், மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மேகதாது அணை கட்டி முடிக்கப்படும் என்றும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா அறிவித்திருக்கிறார். மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிரமாக முயன்று வரும் நிலையில் அதைத் தடுக்காமல் மத்திய அரசும், தமிழக அரசும் வேடிக்கைப்பார்ப்பது கண்டிக்கத்தக்கது.
கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி கடந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய சித்தராமய்யா, மேகதாது அணை கட்டுவதால் மூழ்கும் நிலங்களை அடையாளம் காணும் பணியும், இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படும் மரங்களை எண்ணும் பணியும் நடைபெற்று வருவதாக தெரிவித்திருந்தார். இப்போது அந்தப் பணிகளும் நிறைவடைந்து விட்டதாக கர்நாடகம் தெரிவித்திருக்கிறது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடகம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில் அதை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லதல்ல.