கலைஞர் மகளிர் உரிமை தொகை: ’7 கோடியில் ரூபாயில் எத்தனைப் பேருக்கு ரூ.1000 கிடைக்கும்’ ராமதாஸ் சரமாரி கேள்வி!
“மகளிர் உரிமைத் தொகை தொடர்பான ஒவ்வொரு அறிவிப்பின் போதும் தமிழ்நாட்டு மக்கள் நம்பி ஏமாறுவது வாடிக்கையாகி விட்டது. இன்னொருமுறை தமிழ்நாட்டு மக்களை அரசு ஏமாற்றக் கூடாது”

7 கோடியில் எத்தனைப் பேருக்கு தமிழக அரசு உரிமைத் தொகை வழங்கும்? என பா.ம.க. நிறுவனர் - தலைவர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
மக்களை ஏமாற்றும் செயல்
தமிழக அரசால் செயல்படுத்தப்படும் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் வரும் ஜூன் 4-ஆம் நாள் முதல் பெறப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்தத் திட்டத்திற்காக கூடுதல் நிதியே ஒதுக்காமல் புதிய பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதை மக்களை ஏமாற்றும் செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது.
7 கோடி மட்டுமே அதிகம்
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, இன்றைய நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்படி பயனடையும் குடும்பத் தலைவிகளின் எண்ணிக்கை 1.15 கோடி ஆகும். அவர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் நிதி வழங்க வேண்டுமானால், அதற்கு ரூ.13,800 கோடி தேவை. ஆனால், 2025-26ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் இந்தத் திட்டத்திற்காக ரூ.13,807 கோடி மட்டும் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தேவையை விட வெறும் ரூ.7 கோடி மட்டும் தான் அதிகம் ஆகும்.