’எண்ணெய் நிறுவனங்கள் மூலம் நவீன இந்தி திணிப்பை செய்யும் மத்திய அரசு!’ விளாசும் அன்புமணி ராமதாஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’எண்ணெய் நிறுவனங்கள் மூலம் நவீன இந்தி திணிப்பை செய்யும் மத்திய அரசு!’ விளாசும் அன்புமணி ராமதாஸ்!

’எண்ணெய் நிறுவனங்கள் மூலம் நவீன இந்தி திணிப்பை செய்யும் மத்திய அரசு!’ விளாசும் அன்புமணி ராமதாஸ்!

Kathiravan V HT Tamil
Published Mar 13, 2025 11:46 AM IST

தமிழ்நாட்டில் வணிகம் செய்யும் இந்த நிறுவனங்கள் தமிழ் மொழியில் சேவை வழங்க வேண்டும். இலவச தொலைபேசி அழைப்பைத் தொடர்பு கொள்பவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பதில் அளிக்கும் வாய்ப்பு இருக்கும் போதிலும் கூட, இந்தியில் மட்டும் தான் பதில் அளிக்கப்படுகிறது.

’எண்ணெய் நிறுவனங்கள் மூலம் நவீன இந்தி திணிப்பை செய்யும் மத்திய அரசு!’ விளாசும் அன்புமணி ராமதாஸ்!
’எண்ணெய் நிறுவனங்கள் மூலம் நவீன இந்தி திணிப்பை செய்யும் மத்திய அரசு!’ விளாசும் அன்புமணி ராமதாஸ்!

இது தொடர்பாக அவர் பதிவிட்டு உள்ள ’எக்ஸ்’ வலைத்தள பதிவில்,  தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு இண்டேன், பாரத் கேஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் ஆகியவற்றின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கான இலவச தொலைபேசி அழைப்பில் (1800 2333 555) தொடர்பு கொண்டு பேசும் போதெல்லாம் இந்தியில் மட்டுமே பதிலளிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. இதுவும் ஒரு நவீன இந்தித் திணிப்பு தான். இதை அனுமதிக்க முடியாது.

தமிழ்நாட்டில் வணிகம் செய்யும் இந்த நிறுவனங்கள் தமிழ் மொழியில் சேவை வழங்க வேண்டும். இலவச தொலைபேசி அழைப்பைத் தொடர்பு கொள்பவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பதில் அளிக்கும் வாய்ப்பு இருக்கும் போதிலும் கூட, இந்தியில் மட்டும் தான் பதில் அளிக்கப்படுகிறது. தமிழில் உரையாட வேண்டும் என்று தெரிவித்தால் மீண்டும் தொடர்பு கொள்வதாகக் கூறி அழைப்பு துண்டிக்கப்படுகிறது. இதைத் திட்டமிட்ட இந்தித் திணிப்பாகவே பார்க்க வேண்டும்.

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும், ஆங்கிலத்திலும் பதிலளிக்க மறுப்பதை எண்ணெய் நிறுவனங்கள் நியாயப்படுத்த முடியாது. தமிழில் சேவை வழங்காமல் இந்தியில் மட்டுமே சேவை வழங்குவதற்காக எரிவாயு நிறுவனங்கள் தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவித்த வேண்டும். இந்தித் திணிப்பைக் கைவிட்டு, தமிழ், ஆங்கிலம் மற்றும் அனைத்து மாநில மொழிகளிலும் வாடிக்கையாளர் சேவை வழங்கப்படுவதை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்து உள்ளார். 

--------------------------------------------------------------

தருமபுரி - மொரப்பூர் தொடர்வண்டிப் பாதை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தாது ஏன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தொடர்வண்டித் திட்டங்களுக்குத் தேவையான நிலங்களை கையகப்படுத்திக் கொடுக்க தமிழக அரசு தவறி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பல தொடர்வண்டித் திட்டங்களுக்குத் தேவையான நிலங்கள் கையகப்படுத்திக் கொடுக்கப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள திட்டங்களுக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. ஆனால், தருமபுரி - மொரப்பூர் தொடர்வண்டிப் பாதை அமைக்கும் திட்டத்திற்கு நிலங்களைக் கையகப்படுத்தாததற்கு தமிழக அரசு கூறியிருக்கும் காரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது.

தருமபுரியிலிருந்து மொரப்பூருக்கு 36 கி.மீ தொலைவுக்கு புதிய அகலப்பாதை அமைக்கப்பட வேண்டும். இந்தத் திட்டத்திற்காக மொத்தம் 78.55 ஹெக்டேர் நிலம் தேவை. இதில் வெறும் 8.25 ஹெக்டேர் அதாவது 10.50% நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலங்களில் 24.00 ஹெக்டேர் நிலங்களுக்கு நிலம் கையகப்படுத்துதலில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு மாற்றாக மாற்று வழித்தடம் அமைக்கலாம் என தொடர்வண்டித்துறை தெரிவித்திருப்பதாகவும் தமிழக அரசு கூறியிருக்கிறது. மீதமுள்ள 46.30 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தித் தருவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், 6 ஆண்டுகள் ஆகியும், திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் நிலம் கையகப்படுத்தித் தரப்படவில்லை.

1941-ஆம் ஆண்டில் கைவிடப்பட்ட தருமபுரி - மொரப்பூர் பாதையில் மீண்டும் போக்குவரத்துத் தொடங்கப்பட வேண்டும் என்பது தருமபுரி பகுதி மக்களின் 84 ஆண்டு கால கனவு. அந்தக் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக போராடி, தொடர்வண்டித்துறை நிதிநிலை அறிக்கையில் சேர்க்க வைத்தவன் நான். அதன்பிறகும் அந்தத் திட்டத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், அத்திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்ய வைத்து 2019-ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டச் செய்ததும் நான் தான். மொத்தம் ரூ.358.95 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்திற்கு தேவையான நிலங்களைக் கையகப்படுத்திக் கொடுத்திருந்தால் ஆண்டுக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கும்.

ஆனா, திமுக அரசு நிலம் கையகப்படுத்துவதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை. அதன் விளைவு 2023-24-ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதியை செலவழிக்க முடியவில்லை என்பதால், அந்த நிதி ரூ.49.37 கோடியாக குறைக்கப்பட்டு விட்டது. மாற்று வழித்தடத்திற்காக ரெட்டிஅள்ளி, அளே தருமபுரி, செட்டிக்கரை, மூக்கனூர் ஆகிய பகுதிகளில் 24 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். இதற்கான திட்டத்தை தொடர்வண்டித்துறையிடம் பேசி தமிழக அரசு இன்னும் இறுதி செய்யவில்லை. மீதமுள்ள நிலங்களை கையகப்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை என்றாலும் அவற்றை அரசு இன்னும் கையகப்படுத்தித் தரவில்லை.

தருமபுரி - மொரப்பூர் புதிய அகலப்பாதைத் திட்டத்திற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணிக்காக ஒரு மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட 13 அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஆனால், அவர்களில் ஒரு வட்டாட்சியர் இரண்டு உதவியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். மீதமுள்ள 10 வருவாய்த்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டனர். நிலங்களைக் கையகப்படுத்துவதில் தமிழக அரசு எவ்வளவு அலட்சியம் காட்டுகிறது என்பதற்கு இது தான் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

தமிழ்நாட்டில் தலைநகர் சென்னையிலிருந்து நேரடியாக தொடர்வண்டிப் பாதை இல்லாத ஒரே மாவட்டத் தலைநகரம் தருமபுரி தான். இந்த நிலையை மாற்றி தருமபுரியை சென்னையுடன் தொடர்வண்டி மூலம் இணைக்க இந்தத் திட்டம் மிகவும் அவசியமாகும். இதை உணர்ந்து கொண்டு தருமபுரி - மொரப்பூர் புதிய அகலப்பாதைத் திட்டத்திற்கு தேவையான நிலங்களை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் கையகப்படுத்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என தெரிவித்து உள்ளார். 

Kathiravan V

TwittereMail
காஞ்சி கதிரவன், 2016ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் உள்ளார். இயந்திரவியல் பட்டயப்படிப்பு, இளங்கலை அரசியல் அறிவியல், முதுகலை வணிக மேலாண்மை படித்து உள்ளார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அரசியல், நாட்டு நடப்பு, தொழில்முனைவு, வரலாறு, ஆன்மீகம் சார்ந்த செய்திகளில் பங்களித்து வருகிறார். அபுனைவு நூல்கள் வாசிப்பும், உரைகள் கேட்டலும், உரையாடல்களும் இவரது பொழுதுபோக்கு.
Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.