PM Narendra Modi : ‘ஜெயலலிதா உடன் உரையாடியது கௌரவம்!’ பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்!
பல சந்தர்ப்பங்களில் அவருடன் உரையாடும் வாய்ப்பை நான் பெற்றிருந்தது எனது கௌரவமாகும். அவர் எப்போதும் அன்பாகவும் மக்கள் நலன் சார்ந்த முன்முயற்சிகளுக்கு ஆதரவாகவும் இருந்தவர் என தெரிவித்து உள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடன் பல சந்தர்ப்பங்களில் உரையாடும் வாய்ப்பை நான் பெற்றிருந்தது எனது கௌரவம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள், அன்னதானங்கள் வழங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஜெயலலிதா உடன் பழகிய நாட்களை நினைவுகூர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனது சமூகவலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அவர், கருணைமிக்க தலைவராகவும், திறமைமிக்க நிர்வாகியாகவும் நன்கு அறியப்பட்டவர்.
பல சந்தர்ப்பங்களில் அவருடன் உரையாடும் வாய்ப்பை நான் பெற்றிருந்தது எனது கௌரவமாகும். அவர் எப்போதும் அன்பாகவும் மக்கள் நலன் சார்ந்த முன்முயற்சிகளுக்கு ஆதரவாகவும் இருந்தவர் என தெரிவித்து உள்ளார்.
முன்னதாக பாஜகவை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் ஜெயலலிதாவை நினைவுகூர்ந்து தங்களது சமூகவலைத்தள பக்கங்களில் கருத்து பதிவு இட்டு உள்ளனர்.
ஜெயலலிதாவை நினைவுகூர்ந்த பாஜக தலைவர்கள்:-
எல்.முருகன், மத்திய இணை அமைச்சர்
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மதிப்பிற்குரிய ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்தினம் இன்று. தமிழக மக்கள் வளர்ச்சிக்கு தேவைப்படுகின்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தி சமூகநலனோடு வாழ்ந்து மறைந்தவர். தமிழகத்தின் நலனுக்காகவும், எளிய மக்கள் மற்றும் கல்விக்காகவும் ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்திய, அவரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
அண்ணாமலை, பாஜக மாநிலத் தலைவர்
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம் இன்று. சிறந்த தேசியவாதியாகத் திகழ்ந்தவர். மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியவர். அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
தமிழிசை சௌந்தராஜன், முன்னாள் ஆளுநர்
இரும்பு பெண்ணாக நின்று.. கடுமையான அரசியல் சூழ்நிலைகளை.. துரும்பு என்று சமாளித்து... கடுமையாகத் தெரிந்தாலும்.. மனதில் கரும்பு என்று... நிரூபித்து... கட்சி எல்லை கடந்து.. பெண்கள் விரும்பும் தலைவியாக.. வலம் வந்த... மரியாதைக்குரிய.. முன்னாள் முதலமைச்சர் அம்மா ஜெயலலிதா அவர்களை அவர் பிறந்த நாளில் நினைவு கூறுகிறேன்...
வானதி சீனிவாசன், பாஜக எம்.எல்.ஏ
தமிழக முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்த தினம் இன்று. பெண்களால் எதுவும் சாதிக்க முடியும் என எளிய மக்களுக்கு எடுத்துகாட்டாக வாழ்ந்தவர். அவரது புகழ் என்றும் நிலைத்து இருக்கும்.
ஹெச்.ராஜா, பாஜக மூத்த தலைவர்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம் இன்று. தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகளுக்கு இடமளிக்காமல் துணிச்சலான, உறுதியான பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்ட அவருடைய தைரியத்தை அவரது பிறந்த தினத்தில் நினைவு கூர்கிறேன்.
