PM Pongal: டெல்லியில் பொங்கல் கொண்டாடிய பிரதமர் - நன்கு பாடிய சிறுமிக்கு சால்வை போர்த்தி மரியாதை
டெல்லியில் பொங்கல் விழாவில் பங்கெடுத்த பிரதமர் மோடி, சிறுமி ஒருவரை கவுரவப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் தலைநகர் டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் வீட்டில், கலை நிகழ்ச்சிகளுடன் நடந்த பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது சிறப்பாகப் பாடிய சிறுமிக்கு, தான் அணிந்திருந்த சால்வையை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாட்டின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதியான நாளை கொண்டாடப்படவுள்ளது. முன்னதாக, பல்வேறு தரப்பினர் தங்களது அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். அதன்படி, டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வீட்டில் காலையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் கரகாட்டம், சிலம்பாட்டம், பாடல் பாடுதல்,பறையாட்டம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், நடிகை மீனா மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அப்போது சிறப்பாகப் பாடிய சிறுமிக்கு,தன் தோளில் இருந்த சால்வையை அணிவித்து பிரதமர் மோடி ஊக்கப்படுத்தினார்.
அதனைத்தொடர்ந்து பேசிய பொங்கல் விழா மேடையில் பேசிய பிரதமர் மோடி, தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் என தமிழ் மொழியில் வாழ்த்து கூறினார்.
மேலும்,
'தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு' என்ற திருக்குறளை தமிழில் சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பேசினார். அதன்பொருள் நாட்டு மக்களின் தேவைக்குக் குறையாத விளைபொருளும், தகுதியுடைய சான்றோர்களும், தாழ்வில்லாத செல்வத்தை உடையவரும் ஒன்று சேர்ந்திருப்பதே, நல்ல நாடாகும் என்பதாகும். அந்த பொருளையுடைய இந்திய நாடு என மறைமுகமாக குறிப்பிடும்படி, அந்த திருக்குறளை பிரதமர் மோடி சுட்டிக் காட்டி பேசினார். அதன்பின் அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழர் பாரம்பரிய உணவு பரிமாறப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9