மு.க.ஸ்டாலின் கண்ணில் இருந்து புறப்படும் 1000 வாட் மின்சாரம் 2026 தேர்தலில் எதிரிகளை பொசுக்கும்! சேகர்பாபு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மு.க.ஸ்டாலின் கண்ணில் இருந்து புறப்படும் 1000 வாட் மின்சாரம் 2026 தேர்தலில் எதிரிகளை பொசுக்கும்! சேகர்பாபு!

மு.க.ஸ்டாலின் கண்ணில் இருந்து புறப்படும் 1000 வாட் மின்சாரம் 2026 தேர்தலில் எதிரிகளை பொசுக்கும்! சேகர்பாபு!

Kathiravan V HT Tamil
Published May 04, 2025 03:14 PM IST

“பயம் என்பது ஸ்டாலினின் வாழ்க்கையில் இல்லை. உறவுக்கு கை கொடுப்பார், உரிமைக்கு ஓங்கி குரல் கொடுப்பார், ஒன்றிய அரசுக்கு அடிபணியாத இரும்பு மனிதர் அவர்,” என்று அவர் குறிப்பிட்டார

மு.க.ஸ்டாலின் கண்ணில் இருந்து புறப்படும் 1000 வாட் மின்சாரம் 2026 தேர்தலில் எதிரிகளை பொசுக்கும்! சேகர்பாபு!
மு.க.ஸ்டாலின் கண்ணில் இருந்து புறப்படும் 1000 வாட் மின்சாரம் 2026 தேர்தலில் எதிரிகளை பொசுக்கும்! சேகர்பாபு!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக-அதிமுக கூட்டணியால் எந்த பயமும் இல்லை என்றும், மாறாக ஒரே நாளில் கூட்டணியை உறுதி செய்தவர்களுக்குத்தான் பயம் இருப்பதாகவும், அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். முதலமைச்சரின் தலைமையில் சட்டமன்றக் கூட்டத்தொடர் வெற்றிகரமாக நடந்து முடிந்ததை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட அவர், ஸ்டாலினின் தலைமை மற்றும் தன்னம்பிக்கையை புகழ்ந்தார். மேலும், பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜனின் விளம்பர மோகம் குறித்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்தார்.

முதலமைச்சருக்கு பயமில்லை

பாஜக-அதிமுக கூட்டணி குறித்து எடப்பாடி கே.பழனிசாமி எழுப்பிய கருத்துகளுக்கு பதிலளித்த சேகர்பாபு, “முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பயம் என்ற வார்த்தை அகராதியில் இல்லை. சட்டமன்றத்தில் கோபமின்றி, ஐம்புலன்களையும் அடக்கி, சர்வசாதாரணமாக கூட்டத்தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்தவர் அவர்,” என்று கூறினார். ஜனநாயகத்தின் பாதுகாவலராக ஸ்டாலின் செயல்படுவதற்கு சட்டமன்ற இறுதி நாள் ஒரு எடுத்துக்காட்டு என்று அவர் வலியுறுத்தினார்.

சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்த பிறகு, பிற முதலமைச்சர்கள் கை கூப்பி வணங்கி செல்வது வழக்கமாக இருந்தாலும், ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர்களின் இருக்கைகளுக்கு நேரடியாகச் சென்று கைகுலுக்கி, தனது உறுதியையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தியதாக சேகர்பாபு பாராட்டினார். “பயம் என்பது ஸ்டாலினின் வாழ்க்கையில் இல்லை. உறவுக்கு கை கொடுப்பார், உரிமைக்கு ஓங்கி குரல் கொடுப்பார், ஒன்றிய அரசுக்கு அடிபணியாத இரும்பு மனிதர் அவர்,” என்று அவர் குறிப்பிட்டார்.

பாஜக-அதிமுக கூட்டணிக்கு பயம்

எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜகவின் அமித்ஷா ஒரே நாளில் கூட்டணியை உறுதி செய்ததை சுட்டிக்காட்டிய சேகர்பாபு, “அமித்ஷா தனது ஆளுமையை காட்டி, ஒரே நாளில் கூட்டணியை முடிவு செய்து சென்றவருக்கு பயம் வயிற்றிலும், கண்ணிலும் தெரிகிறது. ஆனால், முதலமைச்சர் ஸ்டாலினின் கண்களில் இருந்து 1000 வாட் மின்சாரம் புறப்படுகிறது. 2026 தேர்தலில் எதிரிகள் பொசுங்குவார்கள்,” என்று கூறி, பாஜக-அதிமுக கூட்டணியை கேலி செய்தார்.

தமிழிசையின் விமர்சனத்துக்கு பதிலடி

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விளம்பர மோகம் இருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்ததற்கு பதிலளித்த சேகர்பாபு, “தமிழிசை தன்னைத்தானே புகழ்ந்து கொள்பவர். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் செயல்படும் ஒன்றிய அரசு, தன்னைத்தானே பாராட்டிக்கொள்கிறது. ஆனால், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடுக்கப்பட்ட பாராட்டு, பல்கலைக்கழகங்கள் மற்றும் சமூக அமைப்புகளால் தன்னிச்சையாக அளிக்கப்பட்டது,” என்று தெரிவித்தார்.

முதலமைச்சர் பாராட்டுகளை விரும்பாதவர் என்றும், பல்கலைக்கழக வேந்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்தப் பாராட்டு நிகழ்ச்சிக்கு இசைவு தெரிவித்ததாகவும் சேகர்பாபு விளக்கினார். “நேற்றைய பாராட்டு, ஒன்றிய அரசுக்கு வழிகாட்டும் புரட்சிகரமான செயல். ஆளுநர்களின் இடையூறுகளுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி, ஒன்றிய அரசுக்கு வழிகாட்டியவர் ஸ்டாலின். இந்தப் பாராட்டு ஒரு நாளோடு நின்றுவிடக் கூடாது, காலமெல்லாம் தொடர வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

தமிழிசையின் விமர்சனங்களை “வயிற்றெரிச்சல்” என்று குறிப்பிட்ட சேகர்பாபு, “வெயில் ஆரம்பித்திருக்கிறது, இன்னும் வெப்பத்தோடு தமிழிசை பேசுவார். ஆனால், நாங்கள் குளிர்ந்த காற்றைத் தேடி, மக்களை குளிர்ச்சியாக அழைத்துச் செல்வோம்,” என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.