ரயிலில் இருந்து விழுந்து இறந்தாரா பிலிப்பைன்ஸ் பெண்? - கணவரிடம் தீவிர விசாரணை
ரயிலில் இருந்து விழுந்து இறந்த பெண் வெளி நாட்டை சேர்ந்தவர் என்பதால், காதலித்து திருமணம் செய்து கொண்டு கணவர் வீட்டுக்கு சென்றபோது அவரே தவறி விழுந்தாரா அல்லது கணவரால் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சேலம்: பெங்களூருவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனது காதல் கணவருடன் வந்த பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தப் பெண் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஹாரிஸ், 48. மருத்துவத்துறையில் பணியாற்றுவதாக கூறப்படும் இவருக்கும் பிலிப்பைன்ஸ், மணிலா பகுதியைச் சேர்ந்த 35 வயதான ரைசல் என்ற பெண்ணிற்கும் சமூகவலைத்தளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு ரைசல் வந்துள்ளார். தொடர்ந்து அந்த பெண், அவரது காதலர் ஹாரிஷை சந்தித்து பேசியுள்ளார். பின்னர் இருவரும் பெங்களூருவில் பதிவு திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தனர்.
அப்போது ரைசல், எர்ணாகுளத்தில் உள்ள தனது காதல் கணவர் ஹாரிஸ் வீட்டுக்கு செல்ல ஆசைப்பட்டுள்ளார். இதையடுத்து இருவரும் நேற்று பெங்களூரில் இருந்து சேலம் வழியாக செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி வந்தனர். அப்போது ஓமலூர் அருகேயுள்ள காருவள்ளி ரயில் நிலையத்தை கடந்தவுடன் ரைசல், ரயிலில் இருந்து திடீரென தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், ரயில் நிற்காததைத் தொடர்ந்து ரைசலின் கணவர் ஹாரிஸ், அடுத்து வந்த ஓமலூர் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தபோது மனைவி ரைசல் சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீவட்டிப்பட்டி போலீசார், இதுகுறித்து தருமபுரி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ரைசலின் உடலை கைப்பற்றிய ரயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயிலில் இருந்து விழுந்து இறந்த பெண் வெளி நாட்டை சேர்ந்தவர் என்பதால், காதலித்து திருமணம் செய்து கொண்டு கணவர் வீட்டுக்கு சென்றபோது அவரே தவறி விழுந்தாரா அல்லது கணவரால் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்டாரா என்பது உட்பட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கேரள மாநிலத்தில் திருமணத்தை பதிவு செய்யாமல் ரகசியமாக பெங்களூவில் பதிவு செய்து அங்கு குடும்பம் நடத்தியது ஏன் என கணவர் ஹாரிஸிடம் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் பிலிப்பைன்ஸ் பெண் உயிரிழந்ததற்கு காரணம் என்னவென்று தெரியவரும்.
டாபிக்ஸ்