Ponmudi: ’திருக்கோயிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்க வேண்டும்’ சபாநாயகர் அலுவலகத்தில் அதிமுக மனு!
”திருக்கோயிலூர் தொகுதி காலியாக உள்ளது என இதுவரை அறிவிக்கவில்லை. இது சபாநாயகரின் கடமை”
முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியிட்டு வென்ற திருக்கோயிலூர் தொகுதியை காலியானதாக அறிவிக்க கோரி சபாநாயகர் அலுவலகத்தில் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வந்ததால், அமைச்சராக இருந்த பொன்முடி தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவர் போட்டியிட்டு வென்ற திருக்கோயிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்க கோரி அதிமுக சார்பில் எம்.எல்.ஏக்கள் தளவாய் சுந்தரம் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் சபாநாயகர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தளவாய் சுந்தரம், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சார்பில் சபாநாயகர் அலுவலகத்திலே சென்று அவரது செயலாளரிடம் மனு அளித்தோம். திரு பொன்முடி அவர்கள், நீதிமன்றம் தீர்ப்பளித்த படி 19-12-2023 அன்று குற்றவாளி என்றும், 21-12-2023 அன்று மூன்றாண்டு தண்டனையும் கொடுக்கப்பட்டுள்ளது. அவரது தண்டனை உறுதியானதால் அவரது பதவியை தகுதிநீக்கம் செய்துள்ளனர்.
ஆனால் அவரது திருக்கோயிலூர் தொகுதி காலியாக உள்ளது என இதுவரை அறிவிக்கவில்லை. இது சபாநாயகரின் கடமை, உச்சநீதிமன்ற நீதிபதி தாமஸ் தீர்ப்பை இணைத்து, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்து உள்ளோம். செயலாளர் உரிய நடவடிக்கை எடுப்போம் என கூறி உள்ளார்.
விஜயதாரணி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் விளவங்கோடு தொகுதி காலி என சொல்லப்பட்ட நிலையில், ஏன் திருக்கோயிலூரை காலியாக வைத்துள்ளீர்கள் என்று சொன்னோம், ப்ராசஸ் நடந்து உள்ளது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் செயலாளர் சொன்னார். நீதிமன்ற பதிவாளரிடம் இருந்து உத்தரவு நகல் பெற்ற உடன் நடவடிக்கை எடுப்பதாக கூறி என தளவாய் சுந்தரம் கூறி உள்ளார்.