Jayalalitha About Periyar: பெரியார் பற்றி ஜெயலலிதா சொன்னது என்ன? ஜெயக்குமார் வெளியிட்ட வைரல் ஆடியோ!
சீமானின் சர்ச்சை பேச்சுக்கு அதிமுக மற்றும் தவெக தரப்பில் இருந்து எந்த கண்டனமும் இதுவரை வரவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தனது ’எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் இதனை வெளியிட்டு உள்ளார்.
பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பேசியது சர்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், பெரியார் குறித்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பேசிய ஆடியோவை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டு உள்ளார்.
சீமானின் சர்ச்சை பேச்சுக்கு அதிமுக மற்றும் தவெக தரப்பில் இருந்து எந்த கண்டனமும் இதுவரை வரவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தனது ’எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் இதனை வெளியிட்டு உள்ளார்.
பெரியாரை புகழும் ஜெயலலிதா
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பேசுகையில், நம் அனைவரின் போற்றுதலுக்கும், வணக்கத்திற்கும் உரியவராய், தன்னுடைய பொதுநல சிந்தனையாலும், சீர்த்திருத்த கருத்துக்களாலும் திராவிட இனத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் உலக அரங்கில் தனி இடத்தை பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார் அவர்கள். அவர் தமிழருக்கு மட்டும் தந்தை அல்ல; திராவிட இனத்திற்கே தந்தை அவர். நவீன இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட சிந்தனை சிற்பிக்கெல்லாம் தலைமையானவர் அவர். வெண் தாடி வேந்தர், பகுத்தறிவு பகலவன் என்று அன்போடு அழைக்கப்படும் பெரியார் தமிழ்நாட்டில் தோன்றி இருக்காவிட்டால், 20ஆம் நூற்றாண்டை சந்திக்காமல் 19ஆம் நூற்றாண்டிலேயே பின் தங்கி இருக்கும் அபாயம் நடந்து இருக்கும்.
தத்துவஞானி! அறிவுலக மேதை!
எவருக்கும் அஞ்சாத சமுதாய சீர்த்திருத்த கருத்துக்கள், புரட்சிக்கரமான சிந்தனை, மனிதாபிமானம் மிக்க செயல்கள், இவற்றின் மொத்த உருவம்தான் பெரியார் அவர்கள். பெரியார் தோற்றுவித்த சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டில் தோன்றி இருக்காவிட்டால், தமிழ்நாடு இன்று தலைநிமிர்ந்து நிற்க முடியாது. தமிழ் இனம் தரணி எங்கும் புகழ் பெற்று இருக்க முடியாது. தந்தை பெரியார் ஒரு சகாப்தம். என்னுடைய பார்வையில் தந்தை பெரியார் 20ஆம் நூற்றாண்டிற்கு தமிழகம் தந்த ஈடு இணையற்ற சிந்தனை சிற்பி, தத்துவஞானி, அறிவுலக மேதை என்று கூறுவேன்.
சாக்ரட்டீஸ் உடன் பெரியரை ஒப்பிட்ட ஜெ!
கிரேக்க சாக்ரட்டீஸ், சீனத்து கன்யூசியஸ், பிரான்ஸ் தேசத்து சிந்தனை சிற்பி ஜீன் பால் சாத்ரே போன்ற தலைசிறந்த தத்துவ மேதைகள் வரிசையில் வைத்து போற்றத்தக்கவர் தந்தை பெரியார் என்பது என்னுடைய தெளிவான கருத்து ஆகும். தத்துவ மேதைகள் எத்தனையோ பேர் தங்களின் கருத்துக்களை எடுத்துரைத்து இருக்கலாம். ஆனால் தந்தை பெரியார் தனது புரட்சிகர சிந்தனைகள் என்றும் நிலைத்து இருக்க ஒரு மாபெரும் சமுதாய இயக்கத்தை ஏற்படுத்தி வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார் என ஜெயலலிதா பேசி உள்ளார்.