7 ஆண்டு நிலுவை பஞ்சப்படி கேட்டு ஆர்ப்பாட்டம் செய்த ஓய்வூதியர்கள் கைது
pensioners protest: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் தமிழ்நாடு அரசு கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் சாலை மறியல் செய்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை: 86 மாதங்களாக அகவிலைப்படி வழங்காமல் நவம்பர் 20-ம் தேதி நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் செயல்படும் அரசைக் கண்டித்து ஓய்வூதியர்கள் மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் தமிழ்நாடு அரசு கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் சாலை மறியல் செய்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அகவிலைப்படி நிலுவையை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் அநீதியை தமிழ்நாடு அரசு கைவிடவும் தொடர்ந்து அகவிலைப்படி உயர்வை வழங்கவும் கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் ஏப்ரல் 2021 முதல் பணி ஓய்வு விருப்ப ஓய்வு, பணிக்காலத்தில் மரணம் அடைந்த தொழிலாளர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய பணிக்கொடை வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை ஆகியவற்றை கடந்த 22 மாதங்களாக வழங்காமல் உள்ளதை கண்டித்து இனியும் காலம் கடத்தாமல் உடனே வழங்க கோரியும்
மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்தாமல் தொடர்ந்து காலம் கடத்துவதைக் கண்டித்தும் ஓய்வூதியர்கள் போராடியுள்ளனர்.
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள மதுரையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலக வாயில் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் அதன் மாநில பொதுச் செயலாளர் தேவராஜ் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த சாலை மறியல் போராட்டத்தில் மதுரை விருதுநகர் திண்டுக்கல் தேனி ஆகிய பகுதியிலிருந்து உள்ள ஏராளமானோர் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஆண்கள் பெண்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்தனர். இந்த போராட்டத்தினால் மதுரை பைபாஸ் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.