Senthil Balaji: ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதில் தாமதம்! நோயாளிகள் புகார்
காலை 8 மணிக்கு மருத்துவமனைக்கு வந்தாலும் பலமணிநேரம் கழித்தே மருத்துவரை பார்க்க முடிந்ததாகவும், சிகிச்சை அளிப்பதில் தாமதம் நேர்ந்துள்ளதாகவும் நோயாளிகள் வேதனை
மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களுக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. அப்போது வழக்கறிஞர் செங்கோட்டையன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கல் வெளியானது.
நேற்றைய தினம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை, கரூரில் உள்ள இல்லங்கள் மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறைகளில் அமலாகத்துறையினர் தொடர் சோதனைகளை நடத்தினர். மேலும் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அவரது சகோதரர் அசோக்கின் வீடு, ராயனுரில் உள்ள கொங்கு மெஸ் உரிமையாளர் மணி என்பவரிடன் வீடு உட்பட 8 இடங்களில் சோதனை நடத்தினர்.
அமலாகத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்த நிலையில் இன்று அதிகாலையில் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.
செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள அறைக்கு அருகே உள்ள அறையில் அமலாகத்துறை அதிகாரிகள் மூன்றுக்கும் மேற்பட்டோரும் சி.ஆர்.பி.எஃப் போலீசாரும் காத்திருக்கின்றனர்.
செந்தில் பாலாஜிக்கு காலையில் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவனை நிர்வாகமும், ஈ.எஸ்.ஐ மருத்துவமனை நிர்வாகமும் பரிந்துரை செய்திருந்தனர்.
இன்று காலை சிகிச்சையில் இருந்த செந்தில் பாலாஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். மேலும் ஓமந்தூரார் மருத்துவமனையில் ஏராளமான அமைச்சர்கள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் காலையில் இருந்தே வருவதும் போவதுமாக உள்ளனர்.
இந்த நிலையில் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் பேட்டரி வாகனங்கள் முறையாக இயக்கப்படவில்லை என்று நோயாளிகள் குற்றம்சாட்டி உள்ளனர். காலை 8 மணிக்கு மருத்துவமனைக்கு வந்தாலும் பலமணிநேரம் கழித்தே மருத்துவரை பார்க்க முடிந்ததாகவும், சிகிச்சை அளிப்பதில் தாமதம் நேர்ந்துள்ளதாகவும் நோயாளிகள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் பேட்டரி வாகனங்களை இயக்கும் நபர்கள் நோயாளிகளிடம் மரியாதை குறைவாக பேசுவதாகவும் நோயாளிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
ஒமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனைக்கு மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.