Pa.Ranjith: 'பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுங்கள்' - பா.ரஞ்சித்!
கொடூர செயலை புரிந்தவர்கள் மீது எவ்வித பாரபட்சமின்றி தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குநர் பா.ரஞ்சித் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை, பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏவான கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன். இவர் தனது மனைவி ஆண்ட்ரோவுடன் திருவான்மியூரில் வசித்து வருகிறாா். இந்த நிலையில், தனது வீட்டில் வேலை செய்த இளம்பெண்ணை வேலை வாங்குகிறோம் என்ற பெயரில் ஆண்ட்ரோ, அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வைரலாக பரவியதைத் தொடர்ந்து பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன், மருமகள் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் தமிழக அரசை வலியுறுத்தினர்.
இதனைத்தொடர்ந்து, வன்கொடுமை தடுப்புச் சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், ஆபாசமாக பேசுதல், மிரட்டுதல், தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பல்லாவரம் எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தாமதமின்றி நீதி கிடைக்க வேண்டும் என இயக்குநர் பா.ரஞ்சித் வலியுறுத்தி உள்ளாா்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: "பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை அவரது மகன் மறுமகள் உள்ளிட்ட குடும்பத்தினர் கொடும் சித்திரவதைக்குள்ளாகிய செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இக்கொடூர செயலை புரிந்தவர்கள் மீது எவ்வித பாரபட்சமின்றி தமிழக அரசு கடூம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும் நிவாரணமும் தாமதமின்றி கிடைத்திட துணை நிற்ப்போம்." என்று கூறியிருக்கிறார்.
இதனிடையே, பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதி அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், “என் மகனுக்கு ஏழு வருடங்களுக்கு முன்னர் திருமணமாகிவிட்டது. அவர் அவரது குடும்பத்துடன் திருவான்மியூரில் வசித்து வருகிறார். நான் வேறு பகுதியில் வசிக்கிறேன். அவர்கள் எப்போதாவது இங்கு வருவார்கள். நானும் எப்போதாவது அங்கு செல்வேன். அங்கு நடந்தது என்னவென்ற முழு விவரம்கூட எனக்குத் தெரியாது. நடந்த சம்பவத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். நான் இதில் ஏதும் தலையிடவில்லை. இந்த விவகாரத்தில் எனக்கும் என் மகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று விளக்கம் அளித்துள்ளாா்.
டாபிக்ஸ்