Pamban Bridge: சரித்திரத்தில் இன்று-பாம்பன் ரயில் பாலத்துக்கு வயது 109!
இந்தியாவின் மிகப்பெரிய பாலமான பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கி இன்றுடன் 108 ஆண்டுகள் நிறைவடைகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபத்தையும் கடலுக்குள் அமைந்து இருக்கும் பாம்பன் தீவையும் இணைக்கும் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கி இன்றுடன் 108 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்தியாவில் கடலின் குறுக்கே கட்டப்பட்ட மிகப்பெரிய பாலம் என்ற வரலாற்று சிறப்பு மிக்க இந்த ரயில்வே தூக்குப்பாலத்தை கட்டுவதற்கான முதற்கட்டப் பணிகள் 1902-ம் ஆண்டு தொடங்கப்பட்டன.
பாம்பன் பாலத்திற்காக 2058 மீட்டர் நீளத்துக்கு 146 இரும்பு தூண்கள் கடலுக்குள் அமைக்கப்பட்டு அவற்றின் மீது 145 இரும்பு கிர்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதிக உயரம் கொண்ட படகுகள் மற்றும் கப்பல்கள் இந்த வழியாக செல்லும் விதமாக பாலத்தின் நடுப்பகுதி மேல்நோக்கி திறந்து மூடும் ரோலிங் லிப்ட் தொழில்நுட்பம் இந்த பாலத்தில் வடிவமைக்கப்பட்டது. இந்த தூக்கு பாலத்தை அமைக்கும் பணிகளை செய்தவர் ஆங்கிலேய பொறியாளர் ஷெர்சர். அவரது நினைவை போற்றும் வகையில் இந்த தூக்குப் பாலத்திற்கு ஷெர்சரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பின்னர் ரயில்கள் செல்வதற்காக தண்டவாளம் அமைக்கப்பட்டது. இந்த பணிகள் 1913-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டு அதே ஆண்டு டிசம்பர் மாதம் முழுமையாக முடிக்கப்பட்டது. பாம்பன் ரயில் பாலத்தில் 1914-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி முதன் முதலாக ரயில் போக்குவரத்து தொடங்கியது. இது 1988-ம் ஆண்டு பாம்பன் சாலை பாலம் கட்டும் வரை ராமேஸ்வரம் தீவுக்கும் மண்டபத்துக்கும் தனித்தன்மை வாய்ந்த முக்கிய போக்குவரத்து வழியாக இருந்தது. ஒரு நாளைக்கு பத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இந்தப் பாலத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.
பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கி இன்றுடன் (பிப்.24) 108 ஆண்டுகளாகிறது. பாம்பன் ரயில் பாலம் இத்தனை ஆண்டுகளை கடந்தும் இப்போதும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் வழியாக ராமேஸ்வரத்துக்கு ரயிலில் செல்வது ஒரு புதுவித அனுபவமாக இருக்கும். இதனிடையே பாம்பன் ரயில் பாலத்தையொட்டி 2.05 கி.மீ தூரத்துக்கு நவீன புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் புதிய பாலம் வருகிற மார்ச் மாதம் ரயில் போக்குவரத்துக்கு தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாபிக்ஸ்