OPS: தாயார் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது" எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்!
குறைந்தபட்சம் நேரில் செல்லாவிட்டாலும் இரங்கல் அறிக்கையாவது ஈபிஎஸ் வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
"முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவிப்பாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாளுக்கு 95 வயது ஆன நிலையில் வயது மூப்பு காரணமாக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன் தினம் அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வந்தபோது கூட தாயாரின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சென்னையில் இருந்து தேனிக்கு அவசரமாக புறப்பட்டு சென்றார். இந்த நிலையில்தான் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் மறைந்தார்.
ஓபிஎஸ் தாயிடம் ஆசி பெற்ற ஈபிஎஸ்
இந்த நிலையில் ஓபிஎஸின் தாயார் பழனியம்மாளுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது ஓபிஎஸின் தாயாரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆசிர்வாதம் பெற்றார். ஓபிஎஸ் விபூதி எடுத்துக் கொடுக்க பழனியம்மாள் ஈபிஎஸின் நெற்றியில் விபூதி வைக்கும் புகைப்படம் அப்போது சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனது.
ஓபிஎஸ், ஈபிஎஸ்,
அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு வெளியானதற்கு பிறகு ஈபிஎஸ்-ஓபிஎஸ் இடையே மேலும் கருத்து மோதல் வெடித்துள்ள நிலையில், குறைந்தபட்சம் நேரில் செல்லாவிட்டாலும் இரங்கல் அறிக்கையாவது ஈபிஎஸ் வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அப்போது அண்ணன் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. தாயாரை இழந்து வாடும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.
டாபிக்ஸ்