’5 நாள் நடக்க வேண்டிய சட்டமன்றம், 2 நாள் கூட நடக்கல!’ புள்ளி விவரத்துடன் விளாசிய எடப்பாடி பழனிசாமி!
2021 சட்டமன்ற தேர்தலின் போது ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டமன்றத்தை நடத்துவோம் என்று வாக்குறுதி அளித்தார். அப்படி பார்த்தால் இதுவரை 400 நாட்கள் பேரவை நடந்து இருக்க வேண்டும். ஆனால் இதுவரை113 நாட்கள்தான் கூட்டத் தொடர் நடந்து உள்ளது.

5 நாட்கள் வரை நடைபெறும் மழைக்கால கூட்டத் தொடரை வெறும் 2 நாட்களில் முடித்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் டங்ஸ்டன்ஸ் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தனி தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டுவந்தார். அப்பொழுது அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக எங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தோம்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேற்றைய தினம் அவருடைய ‘எக்ஸ்’ வலைதளத்தில் உண்மைக்கு புறமான கருத்தை தெரிவித்திருக்கின்றார். நாடாளுமன்றத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மாநிலவை உறுப்பினர் தம்பித்துரை டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு ஆதரவாக பேசியுள்ளதாக கூறி இருந்தார். தம்பித்துரை இது குறித்து விளக்கம் அளித்து உள்ளார். அவர் பேசியதில் மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு ஆதரவு அளிப்பது குறித்து எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கனிம சுரங்க ஒதுக்கீட்டில் பெரிய ஊழல் நடந்தது. ஆனால் ஏலமுறையை கொண்டு வந்ததை ஆதரித்து தம்பிதுரை பேசினார். அதில் என்ன தவறு உள்ளது.
