Online Rummy : ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் செல்லும் - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்து இயற்றப்பட்ட சட்டம் செல்லும் என தீர்ப்பளித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், ரம்மி மற்றும் போக்கர் விளையாட்டுக்களை தடை செய்த பிரிவுகளை ரத்து செய்தும் தீர்ப்பளித்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு இயற்றிய சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது.
அப்போது ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில், சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரமில்லை எனவும், திறமைக்கான விளையாட்டான ரம்மியை, அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாக கருத முடியாது என வாதங்கள் முன் வைக்கப்பட்டன. அதேசமயம், சட்ட கொண்டு வர தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும், தற்கொலைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த பிறகே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி இந்த வழக்குகளின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி அமர்வு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து நிறைவேற்றப்பட்ட சட்டம் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற மனுதாரர் நிறுவனங்களின் கோரிக்கையை நிராகரித்தனர்.
அதிர்ஷ்டத்துக்கான ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்தது செல்லும் என தீர்ப்பளித்த நீதிபதிகள், திறமைக்கான ஆன் லைன் விளையாட்டுக்களான ரம்மி, போக்கர் விளையாட்டுக்களை தடை செய்த பிரிவுகளை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்களை விளையாடுவதற்கான வயது, நேரம் உள்ளிட்டவை தொடர்பாக அரசு விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம் என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்