Tamilnadu Agricultural Education: வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்! இடஒதுக்கீடு, கட்டணம் - முழு விவரம்
வேளாண் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பம் தொடங்கப்பட்டுள்ளது. ஜூன் 6ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இருக்கும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் வேளாண் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பம் இன்று முதல் தொடங்கியுள்ளது. வேளாண் படிப்புகளுக்கான விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து வரும் ஜூன் 6ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை பல்கலைகழக துணைவேந்தர் பேட்டி
வேளாண்மை படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பம் குறித்து வேளாண்மை பல்கலைகழக துணைவேந்தர் வெ. கீதாலட்சுமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, " 120 ஆண்டு கால பழமை வாய்ந்த தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் கீழ், 18 உறுப்பு கல்லூரிகளும், 28 இணைப்பு இயங்கி வருகிறது. இந்த கல்லூரிகளில் இளம் அறிவியல், டிப்ளமோ, முதுநிலை, ஆராய்ச்சி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப இணையத்தளம் மூலம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், அண்ணாமலை பல்கலைகழகம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைகழகம் ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கை tnagfi.ucanapply.com என்ற இணையத்தளத்தின் மூலம் மேற்கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யப்பட்டு, வரும் ஜூன் 6ஆம் தேதிக்குள் சமர்பிக்கப்பட வேண்டும்.
வேளாண்மை பல்கலைகழகத்தின் கீழ் 14 படிப்புகளும், அண்ணாமலை பல்கலைகழகத்தின் கீழ் இரண்டு படிப்புகளும், மீன்வள பல்கலைகழகத்தின் கீழ் 9 படிப்புகளும், மூன்று டிப்ளமோ படிப்புகளும் உள்ளன. இந்த படிப்புகளில் படிக்க விரும்பும் மாணவர்கள் மேற்கூறிய இணையத்தளத்தில் விண்ணப்பம் செய்யலாம்
படிப்புகளுக்கான இடஒதுக்கீடு
அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு, அக்ரி வோகேஷ்னல் படிப்பு படித்தவர்களுக்கு 5 சதவீதம், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீடும் உள்ளது.
விளையாட்டு பிரிவு மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கான இட ஒதுக்கீட்டில் ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு சீட் என தலா 20 சீட்டுகள் ஒதுக்கப்படுகிறது.
ஆன்லைன் விண்ணப்பம் முடிந்த பிறகு, ரேங்கிங் அடிப்படையில் கட் ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். அதன் அடிப்படையில் கவுன்சிலிங் நடத்தப்பட்டு மாணவர்கள் அந்தந்த பாடப்பிரிவில் சேர்க்கப்படுவார்கள்.
விண்ணப்பத்துக்கான கட்டணம்
இந்த படிப்புகளுக்கான விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினருக்கு ரூ. 600, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.300 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிப்ளமோ படிப்புகளுக்கு ரூ.200 விண்ணப்பக் கட்டணமும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.100 விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப பயிற்சிகள்
முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு ஜூன் 12ஆம் தேதியோடு விண்ணப்பம் செயல்முறை முடிவடைகிறது. இதன் பின்னர் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கான தேர்வு நடைபெறும்.
AI தொழில்நுட்பம் வளர்ந்து வரும் சூழ்நிலையில், வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மைக்கான கருவிகள் ஆகியவற்றில் AI தொழில்நுட்பம் குறித்த பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
பழங்கள் மற்றும் காய்கறி அறுவடையிலும் ரோபோட்டிக் கருவிகள் பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேளாண்மை படிப்புகளுக்கான வேலை வாய்ப்புகள்
வேளாண் படிப்புகள் முடித்தவர்களுக்கு அரசின் பல்வேறு துறைகளிலும், குறிப்பாக வேளாண் துறையில் அதிக அளவில் வேலை வாய்ப்பு உள்ளது.
அதுமட்டுமின்றி, அரசின் அமைப்புகள், வேளாண் பொருள்கள் ஏற்றுமதி இறக்குமதி, தர நிர்ணயம் என அக்ரி தொடர்பான வேலை வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.
விவசாயிகளுக்கு பயிற்சி
பொள்ளாச்சியில் ஏற்பட்ட இளநீர் தட்டுப்பாட்டுக்கான காரணங்களாக வறட்சி, வெள்ளை ஈ தாக்குதல் மற்றும் கேரள வாடல் நோய் ஆகியவை உள்ளன.
இவற்றை எதிர்கொள்வதற்காகவும், நீர் மேலாண்மை குறித்தும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சிகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்