DMK - MDMK Alliance: முடிவானது திமுக - மதிமுக தொகுதி பங்கீடு! தனி சின்னத்தில் போட்டியிடும் மதிமுக: வைகோ
திமுக - மதிமுக இடையிலான தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில், இன்று முடிவுக்கு வந்துள்ளது. மதிமுத தனி சின்னத்தில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி திமுக கூட்டணியின் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு ஏற்கனவே கையெழுத்தாகியுள்ளது.
இதையடுத்து திமுக கூட்டணியில் இருந்து வரும் மதிமுகவுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக கடந்த இரு நாள்களாக பேச்சு வார்த்தை நீடித்து வந்த நிலையில் இன்று முடிவுக்கு வந்துள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினை இன்று காலை சந்தித்தார்.
வைகோவுடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் இந்த சந்திப்பின்போது உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்ற நிலையில், மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து திமுக - மதிமுக இடையிலான தொகுதி பங்கீடு உடன்படிக்கை கையெழுத்தானது. இந்த சந்திப்புக்கு பின்னர் நிருபர்களிடம் வைகோ கூறியதாவது: "மக்களவை தேர்தலில் ஒரு தொகுதி எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுடன் பேசிய பிறகு எந்த தொகுதி என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். தனி சின்னத்தில் மதிமுக போட்டியிடும்.
தொகுதி பங்கீட்டில் எங்கள் அனைவருக்கும் மனநிறைவு.நிரந்தரமாக திமுகவுக்கு பக்க பலமாக இருப்போம்.
மாநிலங்களவை இடம் குறித்து இப்போது எதுவும் பேசவில்லை. அதற்கு இன்னும் 15 மாத இடைவெளி இருப்பதால் பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம்." என்றார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்