கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்: ஹேஷ்டேக் போடுவதிலும் தடுப்பதிலும் அதிமுக-திமுக இடையே போட்டி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்: ஹேஷ்டேக் போடுவதிலும் தடுப்பதிலும் அதிமுக-திமுக இடையே போட்டி!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்: ஹேஷ்டேக் போடுவதிலும் தடுப்பதிலும் அதிமுக-திமுக இடையே போட்டி!

HT Tamil HT Tamil Published Jun 19, 2025 03:22 PM IST
HT Tamil HT Tamil
Published Jun 19, 2025 03:22 PM IST

”Hashtag-களை மறைக்க நீங்கள் பாடுபடலாம். மக்கள் மனதில் உள்ள ஆறாத வடுவை மறைக்க முடியுமா?” என்றும் அதிமுக ஐடி விங் கேள்வி எழுப்பி உள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்: ஹேஷ்டேக் போடுவதிலும் தடுப்பதிலும் அதிமுக-திமுக இடையே போட்டி!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்: ஹேஷ்டேக் போடுவதிலும் தடுப்பதிலும் அதிமுக-திமுக இடையே போட்டி!

சம்பவத்தின் தோற்றம் மற்றும் தாக்கம்

2024 ஜூன் 19 அன்று, கள்ளக்குறிச்சியின் கருணாபுரம் பகுதியில் விற்கப்பட்ட மெத்தில் கலந்த கள்ளச்சாராயம் உட்கொண்ட பலர் வயிற்று வலி மற்றும் கண் எரிச்சல் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் 57 பேர் உயிரிழந்த நிலையில், பின்னர் இறப்பு எண்ணிக்கை 67 ஆக உயர்ந்தது.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 31, சேலம் அரசு மருத்துவமனையில் 18, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்தனர்.

தொழில்துறை பயன்பாட்டிற்காக உற்பத்தி செய்யப்படும் மெத்தில், குறைந்த செலவில் உயர் பலம் கொண்ட கள்ளச்சாராயம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டது. தமிழ்நாடு மதுக்கடைகள் (TASMAC) மூலம் விற்கப்படும் சட்டபூர்வ மதுபானங்களை விட, ஏழை மக்களை குறிவைத்து இந்த கள்ளச்சாராயம் சந்தையில் விற்பனை செய்யப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பிறகு, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ஓராண்டு நினைவு - அதிமுக விமர்சனம்

இச்சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், அதிமுக தனது எக்ஸ் வலைத்தளத்தில் திமுக அரசை விமர்சித்து கண்டனம் தெரிவித்து உள்ளது. அதில், “கள்ளச்சாராய ஆட்சிக்கு, கள்ளக்குறிச்சியே சாட்சி! கள்ளக்குறிச்சி கருணாபுரம் கண்ணீரில் மூழ்கி இன்றோடு ஓராண்டு! 67 உயிர்கள் மரணித்தது கள்ளச்சாராயத்தால் மட்டும் அல்ல. தன் நிர்வாகத் திறமின்மையை மறைக்க பச்சைப்பொய் சொன்ன இந்த ஸ்டாலின் அரசின் கள்ளத்தனத்தாலும் தான்!

மரக்காணம் மரணங்களின் போதே திருந்தாத திமுக அரசின் அலட்சியம், கள்ளக்குறிச்சியில் 67 உயிர்களைக் காவு வாங்கியது! கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயப் புழக்கம் இருப்பதை எதிர்க்கட்சி அதிமுக எச்சரிக்கை விடுத்தோமே- அந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கிடப்பில் போட்டதால் வந்த உயிரிழப்புகள் தானே இவை? CBI விசாரணை வேண்டும் என்ற அதிமுக கோரிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றம் வரை சென்றீர்களே- நீதிக்கே எதிரான ஆட்சி என்பதற்கு, இதை விட வேறென்ன சாட்சி வேண்டும்? உச்சநீதிமன்றத்திலும் திமுக அரசு குட்டு வாங்கி, தற்போது CBI விசாரணையில் இந்த வழக்கு உள்ளது. தீர்ப்பு வரும் போது திமுக-வின் கண்ணுக்குட்டி மட்டுமல்ல- கண்ணுக்குட்டியின் எஜமானர்களும் சிக்குவர்! 2026-ல் #கள்ளச்சாராய_திமுகமாடல் ஆட்சி வீழ்ந்து, அஇஅதிமுக ஆட்சி அமைந்ததும் கள்ளச்சாராயம் அறவே இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாடு மீண்டும் வரும்- இது தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் அளிக்கும் வாக்குறுதி மட்டுமல்ல, மரணித்த 67 உயிர்களுக்குமான நீதியும் அதுவே!” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதிமுக ஐடி விங் கேள்வி

#கள்ளச்சாராய_திமுகமாடல் என்ற ஹேஷ்டேக்கை அதிமுக ஐடி விங் ட்ரண்ட் செய்து வரும் நிலையில், அதனை திமுகவினர் இணையதளத்தில் புகார் அளித்து தடுக்க முயற்சி செய்வதாக அதிமுக ஐடிவிங் குற்றம்சாட்டி உள்ளது. ”Hashtag-களை மறைக்க நீங்கள் பாடுபடலாம். மக்கள் மனதில் உள்ள ஆறாத வடுவை மறைக்க முடியுமா?” என்றும் அதிமுக ஐடி விங் கேள்வி எழுப்பி உள்ளது.