OPS vs EPS: இபிஎஸ் தொடா்பான ரகசியம்.. மனம் திறந்த ஓபிஎஸ் சொன்னது என்ன?
எடப்பாடி பழனிசாமி தாமாகவே முன்வந்து அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் வரை, நாங்கள் நடத்தும் தொண்டர்கள் உரிமை மீட்பு யுத்தம் தொடரும் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீர்செல்வம் தொிவித்துள்ளாா்.

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீர்செல்வம் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக தொண்டர்கள் மீட்பு குழு சார்பாக நிர்வாகிகளிடம் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார். அந்த வகையில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட ஆலோசனை கூட்டம் இன்று (டிச.03)திருவான்மியூரில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், "தொண்டர்களின் உரிமையை மீட்பதற்காக தான் இந்த உரிமை மீட்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் கொங்கு மண்டலத்தில் நடந்த கூட்டம் கொங்கு பகுதி நமக்குத்தான் என்பதை நிறுவியது போல இன்றைய இந்த கூட்டம் சென்னை பகுதியும் நமக்கு தான் என உறுதிப்படுத்தியுள்ளது. தங்கள் மாவட்டத்தில் கழக அமைப்ப ரீதியாக உள்ள அனைத்து பொறுப்புகளுக்குமான நிா்வாகிகளை, மாவட்டச் செயலாளா்கள் 15 நாட்களுக்குள் நியமிக்க வேண்டும். முதலில் நியமித்து முடிக்கும் மாவட்டச் செயலாளா்களுக்கு சென்னையில் மிகப்பெரிய கூட்டம் ஒன்றை நடத்தி 5 பவன் தங்கச் சங்கிலி பரிசாக அணிவிக்கப்படும். பாா்க்கலாம் யார் வெல்ல போகிறாா்" எனத் தொிவித்தாா்.
இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்சியில் பிரதமரை சந்தித்தபோது எந்தவிதமான அரசியலும் பேசவில்லை. டெல்லியில் இருந்து விரைவில் அழைப்பு வரும் என எதிர்பார்க்கிறேன். அப்படி வரும்பொழுது நிச்சயமாக செல்வேன். இந்த நிமிடம் வரை பாஜகவுடனான உறவு சுமுகமாக உள்ளது. அவர்களுடனான பேச்சுவார்த்தையும் சுமுகமான நிலையில் சென்று கொண்டிருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் அமமுகவுடன் இணைந்து செயல்படும் சூழல் வந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தொடர்பான ரகசியங்களை பொதுவெளியில் இப்போது சொல்ல முடியாது; காலம் வரும்போது அந்த ரகசியத்தை உரிய நேரத்தில் உரிய இடத்தில் வெளியிடுவேன். கொடநாடு கொலை, கொள்ளை நடந்த போது நான் அதிமுகவில் இல்லை. தர்மயுத்ததில் ஈடுபட்டிருந்தேன். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பு இன்னும் குறுகிய காலத்தில் வந்துவிடும். எடப்பாடி பழனிசாமி தாமாகவே முன்வந்து அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் வரை, நாங்கள் நடத்தும் தொண்டர்கள் உரிமை மீட்பு யுத்தம் தொடரும்." என்றாா்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
