’நாங்களும் NDA-வுலதான் இருக்கோம்! நாங்க இல்லனா அதிமுக ஜெயிக்காது!’ ஓபிஎஸ் ஓபன் டாக்!
“என்.டி.ஏ கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருப்பதாகக் கூறப்படுவது பற்றிய கேள்விக்கு, என்.டி.ஏ கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதாகவும், மத்திய அமைச்சர் அமித் ஷா இங்கு வந்திருந்தபோது ஒன்பது கட்சிகளும் சேர்ந்து பேசி முடிவெடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்றதாகவும் குறிப்பிட்டார்”

நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் உள்ளோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்து உள்ளார்.
மா.செக்களிடம் கருத்து கேட்பு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அமைப்பு ரீதியான மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 89 அமைப்பு ரீதியான மாவட்டங்களில் செயலாற்றி வரும் நிர்வாகிகளை அழைத்து, எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் முடிவுகள் குறித்து அவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டது. இந்த முடிவுகள் இயக்கத்தை தோற்றுவித்த எம்.ஜி.ஆர். மற்றும் வளர்த்த ஜெயலலிதா ஆகியோருக்கு நற்பெயர் தேடித்தரும் என்பதைக் கருத்தில் கொண்டு நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பதிவு செய்யப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், அடுத்தகட்டமாக தமிழகத்தில் உள்ள 38 வருவாய் மாவட்டங்களுக்கும் தலைமைக் கழக நிர்வாகிகள் நேரடியாகச் சென்று, ஒவ்வொரு மாவட்டத்திலும் கழக நிர்வாகிகளின் கூட்டத்தினைக் கூட்டி, தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிய உள்ளனர். இந்தச் செயல்பாடுகள் அடுத்த 15 தினங்களுக்குள் நடைபெறும் என்றும், அதன் பிறகு நிலையான, நீடித்த நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்றும் ஓ.பி.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
