தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Savukku Shankar: ‘காலம் வரும்வரை காத்திருப்போம்..’: சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

Savukku Shankar: ‘காலம் வரும்வரை காத்திருப்போம்..’: சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

Marimuthu M HT Tamil
May 18, 2024 09:34 PM IST

Savukku Shankar: காலம் வரும்வரை காத்திருப்போம் எனக்கூறி சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்தி வைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

Savukku Shankar: ‘காலம் வரும்வரை காத்திருப்போம்..’: சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு!
Savukku Shankar: ‘காலம் வரும்வரை காத்திருப்போம்..’: சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

ட்ரெண்டிங் செய்திகள்

சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக வெளியான அறிவிப்பில், ’’அன்புக்குரிய தமிழக மக்களுக்கும் சவுக்கு ஊடகத்தை பின் தொடர்பவர்களுக்கும் வணக்கம்!

இதுவரை உங்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருந்த சவுக்கு ஊடகம் மற்றும் அதன் நிறுவனரான திரு. சவுக்கு சங்கர் அவர்களை முடக்கும் விதமாக தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளை தாங்கள் நன்கு அறிவீர்கள்..

சவுக்கு என்பது ஒரு குடும்பம். அதில் நீங்களும் ஓர் அங்கம். உங்களை பாதுகாக்கும் பொருட்டு, சவுக்கு ஊடகத்தின் செயல்பாடுகளை இன்றிலிருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம்.

நீதித்துறையின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் இன்னமும் நம்பிக்கை இருக்கிறது. காலம் வரும்வரை காத்திருப்போம். நன்றி’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு:

கடந்த சில நாட்களாக, காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் சவுக்கு ஊடகத்தை நடத்தி வரும் சவுக்கு சங்கர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து காவல்துறையில் உள்ள பெண் காவலர்கள் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பேசிய விவகாரத்தில் அவரை கோவை சைபர் கிரைம் போலீசார் தேனியில் வைத்து கடந்த மே 4ஆம் தேதி அன்று, அதிகாலை 3 மணியளவில் கைது செய்தனர். இதையடுத்து சென்னை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல பகுதிகளில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சி மாவட்ட கணினி சார் குற்றப்பிரிவு காவல் துறையினர் ஏழு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க திருச்சி மகிளா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை மே 16ல் நடைபெற்றபோது நீதிபதி ஜெயபிரதா ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி உத்தரவு வழங்கினார்.

மே 16 மாலை 4 மணியிலிருந்து மே 17 மாலை 4 மணி வரை அவருக்கு போலீஸ் காவல் கொடுக்கப்பட்ட நிலையில் நீதிபதியின் உத்தரவுப்படி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்து விசாரணை துவக்க வேண்டும். மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முன் மருத்துவர் பரிசோதனை செய்து ஆஜர்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு சவுக்கு சங்கரை காவல்துறையினர் அழைத்து வந்துள்ளனர். அதன் பிறகு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

மனநோயாளி ஆகிவிடுவேன் என சவுக்கு சங்கர் வாதம்:

சவுக்கு சங்கரை நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து வந்து நீதிபதி ஜெயப்பிரதா முன் ஆஜர்படுத்தப்படுத்திய போது சவுக்கு சங்கர் உங்களை எதுவும் டார்ச்சர் செய்தார்களா காவல்துறை விசாரணையில் என்று கேட்ட பொழுது, ’இல்லை’ என பதில் அளித்தார்.

தன்னை கோவை சிறையில் தனி அறையில் வைத்துள்ளதாகவும்; அதில் இருந்தால் மனநோயாளியாகிவிடுவேன் என நீதிபதியிடம் முறையிட்டார். திருச்சி சிறையில் தன்னை அடைக்க வேண்டும் என நீதிபதியிடம் முறையிட்டார்.

ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பியபொழுது போதை பழக்கத்தில் உள்ள சிறைவாசிகளுடன் மன நோயால் பாதிக்கப்பட்டவர்களுடனும் அடைத்து வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

’வேறு வார்டுக்கு மாற்ற வேண்டும்’ என திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதாவிடம் வேண்டுகோள் விடுத்தார். சங்கரின் வேண்டுகோள் மனுவை நீதிபதி கோயம்புத்தூர் சிறை கண்காணிப்பாளருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

இதையடுத்து 28.05. 2024ம் தேதி வரை, நீதிமன்ற காவல் உத்தரவு பிறப்பித்தார். கோயம்புத்தூர் சிறைக்கு மீண்டும் சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்