EPS Vs BJP: மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் ஆகிவிட முடியாது! அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதிலடி
ஜெயலலிதா, கருணாநிதி போன்று நானும் ஒரு தலைவர் என அண்ணாமலை கூறி உள்ளதற்கு ஜெயக்குமார் எதிர்வினை ஆற்றி உள்ளார்
மகளிர் தினத்தையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மகளிர் தினவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாட தகுதி பெற்ற இயக்கம் என்றால் அது அதிமுகத்தான்.
இந்தியாவிலேயே முதல் பெண் கமாண்டோ படையை உருவாக்கியது, அனைத்து மகளிர் காவல் நிலையம், உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தியவர் புரட்சித் தலைவி அம்மாதான் என்றார் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
கேள்வி:- பாஜக நிர்வாகிகளை இழுத்துக் கொண்டு அதிமுக வளர நினைப்பதாக அண்ணாமலை கூறி உள்ளாரே?
அதிமுக என்பது கண்ணாடி அல்ல; கல் வீசினால் உடைவதற்கு, அதிமுக என்பது பெருங்கடல், அதில் கல் வீசினால் கற்கள்தான் காணாமல்போகும்.
அண்ணன் எடப்பாடியார் தலைமையில் எழுர்ச்சி ஏற்பட்ட நிலையில் விருப்பப்பட்டு கட்சியில் சேர்கிறார்கள், இதனை அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அனைவருக்கும் இருக்க வேண்டும்.
கேள்வி:- உங்களை விமர்சித்து ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் அறிக்கை விடுத்துள்ளாரே?
வைத்தியலிங்கம் அறிக்கையில் இரண்டு விஷயங்களை குறிப்பிடுகிறார், அம்மா அவர்கள் முதல்வராக இருந்தபோது நான் முதலமைச்சராக ஆசைப்பட்டதாக பச்சை பொய்யை சொல்லி உள்ளார். அப்படி இருந்தால் எனக்கு மீண்டும் கட்சியில் சீட் கொடுத்திருப்பாரா? எனவே வைத்தியலிங்கம் எனது நண்பர், செஞ்சோற்று கடனுக்காக சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்துவிட்டார். அவர் மீண்டும் இங்கு வந்தால் மகிழ்ச்சி.
கேள்வி:- தூத்துக்குடியில் ஈபிஎஸ் உருவபொம்மையை பாஜகவினர் எரித்துள்ளார்களே?
அக்கட்சியின் தலைவர் இதனை கட்டுப்படுத்த வேண்டும், எங்கள் கட்சியில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்கள் கிளர்ந்தெழுந்தால் என்னாவது? எனவே இதனை கண்டித்து கட்சியில் இருந்து நீக்குவதுதான் நல்ல விஷயம், எங்கள் கட்சியில் இருந்து தொண்டர்கள் கிளர்ந்து எழுந்தால் கட்டுப்படுத்த முடியாது.
கேள்வி:- ஜெயலலிதா போன்ற தலைவர்தான் நானும் என அண்ணாமலை தெரிவித்துள்ளாரே?
நான் அம்மா போல ஒரு லீடர் என்று சொல்லாதீர்கள், அவரை போல் ஒரு தலைவர் தமிழ்நாட்டில் உருவாக போவது கிடையாது. செஞ்சிக்கோட்டை ஏறுபவர்கள் எல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது, மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் ஆகிவிட முடியாது.
கட்சிக்கூட்டணியில் ஒரு சில அபிலேஷைகள், உணர்ச்சிகல் எல்லாம் இருக்கும், அவற்றை கட்டுப்படுத்துவது தலைவர்களின் பண்பு, ஆனால் தலைவர்களே உணர்சிகளை தூண்டக்கூடாது. கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் பாஜகவை சேர்ந்தவர்கள் நடவடிக்கை எடுத்தால் நல்லது.
கேள்வி:- கூட்டணி கட்சித் தலைவரை விமர்சித்து அறிக்கை விடுவது தர்மமா?
2024 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி தொடரும் என அண்ணாமலையும், எடப்பாடியாரும் சொல்லிவிட்டார். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை, சிலர் அவரவருடைய ஆதங்கங்களை சொல்கிறார்கள் அவ்வுளவுதான்.
டாபிக்ஸ்