Thuglak controversy: ’சோ இடத்தில் குருமூர்த்தியா?’ கொதிக்கும் எஸ்.வி.சேகர்!
”நம்ம பேரை அந்தாளு நாசம் பண்ணிடுவார்ங்கிறதை உணர்ந்துதான் ரஜினி அரசியலே வேண்டாம்னு முடிவு பண்ணியிருப்பாரு”
சோவின் நாற்காலியில் அமர்வதால் மட்டுமே யாரும் சோ ஆகிவிட முடியாது என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை நடிகரும், பாஜக உறுப்பினருமான எஸ்.வி.சேகர் விமர்சனம் செய்துள்ளார்.
துக்ளக் நாளிதமிழின் 53ஆம் ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி சசிதரூர் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறுகையில், அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது ரஜினிகாந்த் அரசியலில் தீவிரமாக வர வேண்டும் என நினைத்தார். அப்போது அவர் என்னிடம் ’நான் முதலமைச்சராக வரமாட்டேன்’ என்று கூறினார்.
‘நீங்களே முதலமைச்சராக வரவில்லை என்றால் வேறு யார் வருவார்கள்?’ என நான் கேட்டேன் அப்போதுதான் அண்ணாமலை என்று ஒருவர் இருப்பதை பற்றி கூறினார்.
அண்ணாமலை குறித்து நான் பேப்பரில் கேள்விபட்டு இருந்தேன். பாஜக சித்தாந்தத்தால் அண்ணாமலை ஈர்க்கப்பட்டுள்ளார். ஒரு போலீஸ் அதிகாரிக்கு இருக்க வேண்டிய குணங்கள் அண்ணமலைக்கு உள்ளது. அரசியல் என்பது சவால் நிறைந்தது. வாழ்கையில் நிம்மதியாக இருந்த மனிதர், இன்று அதை ஓரம்போட்டுவிட்டு அரசியலில் உள்ளார். இன்று அண்ணாமலை பாஜகவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார் என பேசி இருந்தார்.
அண்ணாமலை குறித்த பேச்சு குறித்து நடிகரும், பாஜக உறுப்பினருமான எஸ்.வி.சேகர் தனது ’எக்ஸ்’ சமூகவலைத்தளத்தில் ட்வீட் செய்துள்ளார்.
அதில் அப்படி நினைச்சதே பெரிய தப்பு, நம்ம பேரை அந்தாளு நாசம் பண்ணிடுவார்ங்கிறதை உணர்ந்துதான் ரஜினி அரசியலே வேண்டாம்னு முடிவு பண்ணியிருப்பாரு. எனக்குத்தெரிந்த ரஜினி யார் பேச்சுக்கும் தலையாட்டுபவர் அல்ல. சொந்தமாக முடிவெடுப்பவர். தெய்வத்தை மட்டும் நம்புவர்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது மற்றோரு ‘எக்ஸ்’ வலைத்தளப்பதிவில், “சோ உடன் யாரையும் ஒப்பிடமுடியாது! சோவின் நாற்காலியில் அமர்ந்திருப்பதே ஒருவரை சோவாக மாற்றிவிடாது” என தெரிவித்துள்ளார்.