NIA: தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் ஊடுறுவல்? நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ சோதனை
சாட்டை துரைமுருகன் உட்பட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பலரது வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, நெல்லை, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, திருச்சி, தென்காசி, ராஜபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பிறநாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்பினர் இந்தியாவில் ஊடுருவல் செய்துள்ளனரா என்ற பின்னணியில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சியை சேர்ந்த பிரபல யூடியூப்பரும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகியான சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சி வயலூர் சாலை சண்முகா நகரில் உள்ள வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவது தொடர்பாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தடை செய்யப்பட்ட எல்டிடி அமைப்பினரோடு தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
திருச்சி, கோவையில் நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது.
கோவையில் இரண்டு இடங்களில் சோதனையானது நடத்தப்பட்டது. கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள முருகன் என்பவரது இல்லத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினர். காலை 6.30 மணிக்கு சோதனைக்கு வந்த நான்கு பேர் கொண்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் குழுவினர் ஒன்பது மணி வரை சோதனையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து முருகன் செல்போனை பறிமுதல் செய்தனர். நாம் தமிழர் கட்சியின் தீவிர ஆதரவாளரான முருகன் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவரது சொந்த ஊர் தென்காசி.
இதே போல தொண்டாமுத்தூர் அருகே ஆலந்துறையில் நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி ரஞ்சித் என்பவரது இல்லத்திலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு மற்றும் வெளிநாட்டு நிதி விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்